சென்னை மாநகரில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதன் தாக்கம், தற்போது நேரடியாகப் பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தட்டில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் தங்களின் உணவுப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
விலை மாற்ற விவரங்கள்: முன்பு நடுத்தர ஹோட்டல்களில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பரோட்டாவின் விலை, தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அசைவ பிரியர்களின் விருப்பமான பிரியாணி வகைகள், அதன் வழக்கமான விலையிலிருந்து ரூ.30 வரை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் வேதனை: திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால், தினமும் ஹோட்டல் உணவுகளையே நம்பியிருக்கும் பேச்சுலர்கள், வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். “சிலிண்டர் விலை உயரும்போதெல்லாம் உணவு விலையை உயர்த்தினால், சாதாரண மக்கள் எப்படிச் சாப்பிட முடியும்?” எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு இதே நிலையில் நீடித்தால், வரும் நாட்களில் மற்ற சிற்றுண்டி வகைகளின் விலையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.