எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.990.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் புதிய உச்சம்: இந்த விலை உயர்வால், சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.3,237 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மற்ற முக்கிய நகரங்களான டெல்லியில் ரூ.3,071-க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202-க்கும் இந்த சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திடீர் விலையேற்றம் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 கிலோ சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர்: வணிக சிலிண்டரைத் தொடர்ந்து, சிறு வணிகர்களுக்குப் பயன்படும் 5 கிலோ சிலிண்டரின் விலையும் ரூ.261 உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், சாமானிய மக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வணிக சிலிண்டர் விலை ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.





