IPL 2026 Spectator Ban Demand: மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா? விளையாட்டு அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்; எஞ்சிய போட்டிகளில் திடீர் அதிரடி மாற்றம்?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 டி20 தொடரில், எஞ்சிய போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்த வேண்டும் என்ற அதிரடி கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் அமைப்பான சிடிஐ தலைவர் பிரஜேஷ் கோயல், இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் போதும் மைதானத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாகனங்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வீணடிக்கப்படுவதாக சிடிஐ கவலை தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் எரிபொருளைச் சேமிப்பது மிக அவசியமான ஒன்றாகும். போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்தினால், பொதுமக்களின் தேவையற்ற போக்குவரத்து குறைந்து பெருமளவில் எரிபொருள் சேமிக்கப்படும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணியினரும் வெவ்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்யப் பயன்படுத்தும் சார்ட்டர் விமானங்கள் மூலம் தலா 50,000 முதல் 70,000 லிட்டர் வரையிலான ஏவியேஷன் ஃபுயல் செலவழிக்கப்படுகிறது. இந்த அசுரத்தனமான எரிபொருள் பயன்பாடு அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி மற்றும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என சிடிஐ குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Fuel Price Shock: சாமானியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி! 4 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு; சென்னையில் இன்றைய புதிய விலை இதோ!

எனவே, கொரோனா காலகட்டத்தைப் போல ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையும் குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று நகரங்களுக்குள் சுருக்கி, புதிய மாற்று அட்டவணையுடன் எஞ்சிய போட்டிகளை நடத்த வேண்டும் என விளையாட்டு அமைச்சகத்தை வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.