நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்காகத் தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2 நாட்கள் சிறப்புப் பயிற்சி முகாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான வழிகாட்டுதல் நெறிமுறைப் பயிற்சி முகாமில் ஒட்டுமொத்தமாக 104 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தற்பொழுது பங்கேற்றுள்ளனர்.
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்த எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி நிகழ்வை முழுமையாகப் புறக்கணித்துள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. “ஸ்கூலுக்கு வராம முதல் நாளே திமுக எம்எல்ஏக்கள் எல்லாரும் கட் அடிச்சிட்டாங்களா?” என்று நெட்டிசன்கள் இந்த விவகாரத்தைச் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், மற்ற முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த வகுப்பில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். குறிப்பாக, அதிமுக சார்பில் சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ ராகேஷ் மட்டும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார். பாமக தரப்பில் சௌமியா அன்புமணி, மதிமுக தரப்பில் செந்தில் செல்வன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் விசிக தரப்பில் அமைச்சர் வன்னிஅரசு மற்றும் பாஜக சார்பில் நீலகிரி (உதகமண்டலம்) தொகுதி எம்எல்ஏ போஜராஜன் ஆகியோரும் இந்த அசெம்பிளி கிளாஸில் ஆஜராகியுள்ளனர்.
பயிற்சி முகாமில் புதிய எம்எல்ஏ-க்களுக்குச் சட்டமன்ற நெறிமுறைகள் குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மிகக் கடுமையான அறிவுரைகளையும், சில வரலாற்று எச்சரிக்கைகளையும் விடுத்தார். “சட்டமன்ற உறுப்பினர்களின் கன்னிப் பேச்சின் போது அவையில் பொதுவாக யாரும் குறுக்கிட மாட்டார்கள்” என்று அவர் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய விதியை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர், “சட்டப்பேரவையில் இதற்கு முன்பு சபாநாயகருக்குப் பெரும் சிரமங்களைக் கொடுத்தவர்களும் உண்டு. சபாநாயகர் இருக்கையிலேயே அமர்ந்து சண்டை போட்டுக் கொண்டவர்களும் இந்த சபையின் வரலாற்றில் இருக்கிறார்கள்” என்று பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
“சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நூலகத்திற்குச் சென்று பழைய பேரவை நிகழ்வுகளை முறைப்படி படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சபை விதிகளை மீறி அன்று நடந்த பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அனைத்தும் இன்றும் பேரவையின் அவை குறிப்பில் அப்படியே சான்றாக நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புதியவர்கள் மனதில் நிறுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.