பிகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த ரகுவீர் என்பவருக்கும், அவரது மகன் சிவ சங்கருக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு நிலவி வந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்த சிவ சங்கர், இந்த நிலப் பிரச்சினையால் தந்தை மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில்தான், குற்றச் செயலைச் செய்துவிட்டு காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் கதையம்சம் கொண்ட ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தைப் பார்த்த சிவ சங்கர், அதே பாணியில் தனது தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தப்பத் திட்டம் தீட்டியுள்ளார்.
திரைப்பட நாயகனைப் போலவே தானும் குற்றம் நடக்கும் நேரத்தில் வேறு இடத்தில் இருந்தது போன்ற ஒரு வலுவான சான்றை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி சூரத்தில் இருந்து தனது செல்போனை முற்றிலும் அணைத்துவிட்டு, சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகார் மாநிலம் சமஸ்திபூருக்குப் ரகசியமாகப் புறப்பட்டார்.
நள்ளிரவு நேரத்தில் தந்தையின் வீட்டிற்குச் சென்ற அவர், வாசலில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை ரகுவீரைக் கோடரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, உடனடியாகச் சூரத்திற்குத் திரும்பினார்.
காவல்துறையை முற்றிலும் திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சிவ சங்கர் தனது பயணத் திட்டத்தை மிக நுட்பமாக வகுத்திருந்தார். பயணம் முழுவதிலும் தனது கைப்பேசியை அணைத்தே வைத்திருந்த அவர், கொலைச் சம்பவத்தை முடித்துவிட்டுச் சூரத்திற்குத் திரும்பும் வழியில் செய்த ஒரு சிறிய தவறு அவரது மொத்த திட்டத்தையும் தலைகீழாக மாற்றியது.
பயணத்தின் போது, தனது கைப்பேசியை ஒரே ஒரு முறை மட்டும் ஆன் செய்து மனைவியிடம் பேசிவிட்டு மீண்டும் அணைத்துள்ளார்.
தந்தையின் கொலையைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய பிகார் காவல்துறையினர், ரகுவீரின் குடும்பத்தினரின் செல்போன் டவர் இருப்பிடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, சூரத்தில் இருக்க வேண்டிய சிவ சங்கரின் கைப்பேசியை எண், கொலை நடைபெற்ற காலகட்டத்தில் பிகாரை நோக்கிப் பயணிக்கும் வழியில் சில நிமிடங்கள் இயங்கியதை செல்போன் கோபுரத் தரவுகள் சுட்டிக்காட்டின.
மேலும், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிவ சங்கர் வராததும் காவல்துறையினருக்கு அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகத்தின் அடிப்படையில் சிவ சங்கரைப் பிடித்துக் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் தனது தந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தைப் பார்த்த பிறகே இந்த கொலைக்கான முழு திட்டத்தையும் தீட்டியதாக அவர் தெரிவித்தார்.
அதில் வரும் கதாநாயகன் எவ்வாறு காவல்துறையைத் தவறான பாதையில் அழைத்துச் சென்று தப்பிக்கிறாரோ, அதேபோலத் தானும் தப்பித்துவிடலாம் என நம்பியதாகக் கூறினார்.
திரைப்படங்களைப் பார்த்து குற்றம் செய்யத் தூண்டப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. எவ்வளவுதான் கச்சிதமாகத் திட்டம் தீட்டினாலும், ஏதேனும் ஒரு சிறிய டிஜிட்டல் தடம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திவிடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.