‘தங்க நகரம்’ (City of Gold) என்று உலகளவில் அழைக்கப்படும் துபாய், சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச தங்க முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. துபாயில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ (Dubai Gold District) பகுதியில் 24 கேரட் சுத்தமான தங்கத்தைப் பயன்படுத்தி பிரத்யேக நடைபாதை (Gold Walkway) ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே முதல்முறையாகத் தங்கத்தைக் கொண்டு நடைபாதை அமைக்கும் இந்த விசித்திரத் திட்டம் குறித்துப் பேசிய துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் வர்த்தகப் பிரிவின் மூத்த இயக்குநர் ரஷீத் அல் ஹர்மூதி, “துபாயை உலகளாவிய தங்க வர்த்தக மையமாகவும், முதன்மைச் சுற்றுலாத் தளமாகவும் மாற்றுவதே எங்கள் இலக்கு. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த 24 கேரட் தங்க நடைபாதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இந்தத் தங்கப் பாதையில் நடந்தவாறே வணிக வளாகங்களின் அழகை ரசிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளைப் படைத்த பிரம்மாண்டத் தங்கக் கம்மல்!
தங்க நடைபாதை செய்தி ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டில் அமைந்துள்ள ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நகைக்கடை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘மயூரா சஹஸ்ரா’ (Mayura Sahasra) என்ற தங்கக் கம்மல் ஒரே நாளில் இரண்டு கின்னஸ் உலகச் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளது.
இந்தியத் பாரம்பரியக் கலைநயத்தைப் பறைசாற்றும் வகையில் 22 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கம்மலின் சிறப்பம்சங்கள்:
-
மொத்த எடை: 16.514 கிலோ
-
நீளம் மற்றும் விட்டம்: 1.215 மீட்டர் நீளம், 0.682 மீட்டர் விட்டம்
-
உழைப்பு: 55 கைவினைஞர்கள் சேர்ந்து 5,840 மணிநேரம் உழைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.
உலகின் ‘மிகக் கனமான தங்கக் கம்மல்’ மற்றும் ‘மிகப்பெரிய தங்கக் கம்மல்’ ஆகிய இரண்டு பிரிவுகளில் கின்னஸ் அமைப்பு இதற்கு அதிகாரப்பூர்வச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. தங்கப் பாதையில் நடைபயணமும், பிரம்மாண்ட நகைகளின் கின்னஸ் சாதனைகளுமாக துபாய் மீண்டும் உலக அரங்கில் தனது ஆடம்பர ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது!