தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு விவரங்களை மிக எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், வாட்ஸ்ஆப் மூலமாக பிஎஃப் சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு முறைப்படி தொடங்கிவைத்துள்ளது. நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முறைசாரா மற்றும் முறைசார் துறை ஊழியர்கள், தங்களின் பிஎஃப் கணக்குத் தகவல்களைப் பெறுவதில் நிலவி வந்த சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த டிஜிட்டல் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வசதியின் மூலமாகப் பயனர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகை (PF Balance), கணக்கின் டிஜிட்டல் பாஸ்புக் (Passbook) விவரங்கள் மற்றும் கணக்கில் நடைபெற்ற கடைசி 5 பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை உடனடியாகத் தன் கைபேசியிலேயே பெற முடியும். மேலும், ஒவ்வொரு மாதமும் நிறுவன நிர்வாகத்தின் சார்பில் பிஎஃப் சந்தாத் தொகை முறையாகக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஊழியர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி உறுதிசெய்து கொள்ளலாம்.
சேவையைப் பயன்படுத்தும் வழிமுறைகள்:
- இபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் எண்ணிற்கு சந்தாதாரர்கள் தங்கள் யுஏஎன் (UAN) எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து செய்தி அனுப்ப வேண்டும்.
- பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிசெய்யும் வகையில், கைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளீடு செய்து அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.
- சரிபார்ப்பு முடிந்ததும் திரையில் தோன்றும் விருப்பங்களில் இருந்து பாஸ்புக் அல்லது இருப்புத் தொகையைத் தேர்வு செய்து தேவையான விவரங்களைப் பெறலாம்.
இதுவரை பிஎஃப் கணக்கு விவரங்களை அறிய இணையதள நுழைவுப் பக்கங்கள் அல்லது அலுவலகங்களை நாட வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வாட்ஸ்ஆப் தளம் வழியாகவே இச்சேவைகள் நேரடியாகக் கிடைப்பதால், நேர விரையம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.