H1N1 Virus: எச்1-என்1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உயர்வு: “புதிய வைரஸ் இல்லை!” ICMR முக்கிய விளக்கம்!

இந்தியாவில் எச்1-என்1 (H1N1) பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் ஆங்காங்கே அதிகரித்து வரும் சூழலில், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ பீதியோ அடையத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் காய்ச்சல் தொற்றுகளில் புதிய வகை உருமாறிய வைரஸ்கள் (New Virus Strain) எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், வழக்கமாகப் பருவகாலத்தில் ஏற்படும் எச்1-என்1 வைரஸ் பரவலே இது என்றும் மருத்துவ வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது தலைவலி, முன் தொண்டையில் வீக்கம் அல்லது வலி, கடுமையான உடல் வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனச் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைத் தடுப்பதற்கு எளிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொதுமக்களுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:

  • பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்குத் தவறாமல் தூய்மையான கைக்குட்டையைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வாயையும் மூக்கையும் கைக்குட்டையால் மூடிக்கொள்வதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

  • பொதுமக்கள் அனைவரும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 10 முறையாவது சோப்பு அல்லது கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளைச் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், தவிர்க்க முடியாத சூழலில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.

பொதுமக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதைத் தவிர்த்து, காய்ச்சல் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.