Icelandair Pilot Action : “ரிடையர்மெண்ட்” பாசம் – ஊர் மீது விமானத்தை தாழ்வாக பறக்கவிட்ட பைலட்!

ஐஸ்லாண்ட்ஏர் (Icelandair) நிறுவனத்தின் சீனியர் பைலட் ஒருவர், தனது ஓய்வு நாளில் செய்த ஒரு அதீத சென்டிமென்ட் காரியம் இப்போது சர்வதேச அளவில் பெரிய குற்றவியல் விசாரணையாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 11, 2026 அன்று ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இருந்து ஐஸ்லாந்தின் கெப்லாவிக் நகருக்குச் செல்ல வேண்டிய பயணிகள் விமானத்தை, அந்த பைலட் யாருடைய அனுமதியும் இன்றி திடீரென திசைமாற்றித் தனது சொந்த ஊரான வெஸ்ட்மன்னேஜர் (Vestmannaeyjar) பகுதிக்கு மேல் பறக்கவிட்டார். 40 ஆண்டுகால நீண்ட பணியின் கடைசிப் பயணம் என்பதால், தனது ஊருக்கு வானத்தில் இருந்தபடியே விடைபெற அவர் செய்த இந்த விபரீத முயற்சி இப்போது சட்ட சிக்கலில் முடிந்துவிட்டது.

வானத்தில் நடந்த இந்த திக் திக் சம்பவம் அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளை உறைய வைத்தது. போயிங் 757 ரகத்தைச் சேர்ந்த அந்த ராட்சத பயணிகள் விமானத்தை, தரைமட்டத்தில் இருந்து வெறும் 328 அடி (100 மீட்டர்) உயரத்தில் அந்த பைலட் மிகத் தாழ்வாக இயக்கியுள்ளார். பொதுவாக இவ்வளவு தாழ்வாகப் பயணிகள் விமானத்தை இயக்குவது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். இதனால் அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் பயங்கரமாக அதிர்ந்தன. என்ஜின் சத்தத்தால் மக்கள் ஏதோ விபத்து நடக்கப்போகிறது என்று பதறியடித்துக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். இந்த ஆபத்தான சாகசத்திற்கு ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் (ATC) அல்லது விமான நிறுவனம் என யாரிடமும் அவர் முன் அனுமதி பெறவில்லை என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

ஐஸ்லாண்ட்ஏர் நிறுவனம் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கருதி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது வெறும் உணர்ச்சிகரமான விடைபெறுதல் மட்டுமல்ல, விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடும் ஒரு பாரதூரமான விதிமுறை மீறல் என்று நிறுவனத்தின் தலைமை அதிகாரி காட்டமாகத் தெரிவித்துள்ளார். 65 வயதான அந்த சீனியர் பைலட் மீது ஏற்கனவே உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர் பணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுவிட்டாலும், வான்வழி பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்தின் கருப்பு பெட்டி தகவல்கள் மற்றும் ரேடார் தரவுகளை வைத்து இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரு பைலட் தனது தனிப்பட்ட ஆசைக்காக ஒட்டுமொத்த விமானத்தையும், பயணிகளையும் ரிஸ்க்கில் தள்ளியது சர்வதேச விமான போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “குறைந்தபட்சம் பயணிகளுக்காவது தகவல் சொல்லிவிட்டு இதைச் செய்திருக்கலாம்” என அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த அத்துமீறலை மன்னிக்க முடியாது என்பதில் விமான நிறுவனம் உறுதியாக உள்ளது. முறையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது.

Leave a Comment