1500% உயர்ந்த தங்கம் கடத்தல்.. 29% குறைந்த தேவை: உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (WGC) தரவுகளைச் சுட்டிக்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் தங்கம் கடத்தல் சுமார் 1500 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 மெட்ரிக் டன் தங்கம் சட்டவிரோத வழிகளில் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக டபிள்யூஜிசி கணித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 3 டன் தங்கம் மட்டுமே சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த அளவில் பிரம்மாண்டமான முறையில் தங்கம் கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி உயர்வும் கடத்தலும்

உலகளவில் தங்கம் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்தது. இதனால் வெளிநாட்டு செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது.

நடப்பு ஆண்டின் மே மாதத்தில் 6 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கிட்டத்தட்ட 15 சதவீதம் வரை உயர்த்தியது. இந்த வரி உயர்வு காரணமாக வரி செலுத்துவதைத் தவிர்க்க நினைக்கும் நபர்கள் சட்டவிரோத கடத்தல் பாதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மறைமுக வழிகளில் தங்கம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது.

சரிவடைந்த தங்கத்தின் தேவை

மற்றொரு புறம், இந்தியாவில் தங்கத்திற்கான உள்நாட்டுத் தேவை 29 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை – செப்டம்பர் காலாண்டில் தங்கத்தின் தேவை 162.5 டன்னாகக் குறைந்துள்ளது. அதிக இறக்குமதி வரி மற்றும் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு பிரதமர் மோடி விடுத்த கோரிக்கைகளும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் தங்கத்தின் தேவை 229.8 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தங்கத்தின் விலை உயர்வால் மதிப்பின் அடிப்படையில் இதன் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு முழு ஆண்டிற்கும் இந்தியாவில் தங்கத்தின் தேவை 625 முதல் 675 டன்கள் வரை இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.