ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு எதிர்பாராத காரணங்களால் பயணம் செய்ய முடியாமல் போனால், பலரும் உடனே டிக்கெட்டை ரத்து செய்து கட்டண இழப்பைச் சந்திப்பார்கள். ஆனால், இந்திய ரயில்வே விதிகளின்படி, உங்கள் பெயரில் உள்ள உறுதிசெய்யப்பட்ட (Confirmed) ரயில் டிக்கெட்டை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது சில குறிப்பிட்ட நபர்களுக்கோ எளிதாகப் பெயர் மாற்றம் செய்து மாற்றித்தர முடியும். இதற்காக ரயில்வே நிர்வாகம் சில முக்கிய நெறிமுறைகளையும் காலக்கெடுவையும் வகுத்துள்ளது.
சொந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட்டை மாற்ற விரும்புபவர்கள், ரயில் புறப்படுவதற்குச் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக ரயில்வே முன்பதிவு மையத்தை (Reservation Counter) அணுகி விண்ணப்பிக்க வேண்டும். தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி ஆகிய 8 வகையான நெருங்கிய இரத்த உறவுகளுக்கு மட்டுமே டிக்கெட்டை மாற்ற முடியும். இதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன், சம்பந்தப்பட்ட நபரின் அடையாளச் சான்றையும் (Aadhaar / ID Proof) சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் திருமணக் குழுவினருக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மூலம் கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களில் யாரேனும் செல்ல முடியாவிட்டால், அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கு டிக்கெட்டை மாற்றலாம். அதேபோல, திருமணத்திற்கு குழுவாகச் செல்லும் நபர்களில் யாராவது வர இயலவில்லை எனில், குழுவின் தலைவர் மூலமாக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் மொத்த டிக்கெட்டுகளில் 10 சதவீத எண்ணிக்கைக்கு மட்டுமே இந்த மாற்றம் அனுமதிக்கப்படும்.
இதுதவிர, எஸ்சிசி (NCC) கேடட்கள் மற்றும் அரசுப் பணியில் உள்ள ஊழியர்கள் அதிகாரப்பூர்வப் பணிகளுக்காகச் செல்லும்போது, குழுத் தலைவர் அல்லது தகுந்த அதிகாரி மூலம் 24 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பித்து டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்துகொள்ள முடியும். இருப்பினும், ஒரு முறை உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே பெயர் மாற்றம் செய்ய அனுமதி உண்டு என்பதும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட நபரே அதில் பயணம் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.