இந்திய நீதித்துறை வரலாற்றில், பொய் வழக்குகள் மற்றும் சட்டத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஒரு அமைதியான, ஆனால் மிகக் கடுமையான புரட்சி வெடித்துள்ளதை முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன. பெண்களின் பாதுகாப்பு, வன்கொடுமைத் தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட கடுமையான சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட பழிவாங்கல், நில ஆக்கிரமிப்பு மற்றும் பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த சில தவறான நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் தங்களின் இரும்புக்கரத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளன. வெறும் விடுதலையோடு நிறுத்திக் கொள்ளாமல், பொய் புகார் அளித்தவர்களுக்குச் சமமான சிறை தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் பெரும் அபராதங்களை நீதிபதிகள் விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு மிகச் சிறந்த சான்றாக உத்திரப் பிரதேசத்தின் பேரெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் State of UP v. Nisha வழக்கின் தீர்ப்பு அமைந்தது. 2018-ல் அஜய் ராகவ் என்பவர் மீது தொடரப்பட்ட பொய் கற்பழிப்பு வழக்கில், அவர் நிரபராதி என்று நிரூபணமாவதற்குள் 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 8 நாட்கள் (மொத்தம் 1,653 நாட்கள்) சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. குறுக்கு விசாரணையில் அந்த பெண் பொய் சாட்சியம் அளித்ததை ஒப்புக்கொண்ட நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஞானேந்திர திரிபாதி Section 195 IPC-ன் கீழ் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தார். நிரபராதியான அஜய் சிறையில் கழித்த அதே 1,653 நாட்களை அந்த பெண்ணும் கடுங்காவல் தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்றும், அஜய்யின் இழந்த நாட்களுக்கான இழப்பீடாக அன்ஸ்கில்டு லேபர் ஊதியக் கணக்கீட்டின்படி ₹5,88,822 அபராதமாக அந்த பெண் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். “பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் ஆண்களின் உரிமைகளைத் தாக்குவதற்கான விலக்கல்ல” என்ற நீதிபதியின் வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அதேபோல, லக்னோவில் பரமானந்த் குப்தா என்ற வழக்கறிஞர் ஏழை எளிய மக்களின் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, 29 போலி வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு வழக்குகளைத் தொடர்ந்து பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த சட்டவிரோத கும்பலைச் சிறப்பு நீதிமன்றம் அம்பலப்படுத்தியது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், சட்டத்துறையைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேலும் டெல்லி துவாரகா நீதிமன்றத்தில், குடும்பத் தகராறில் தன் மைத்துனரான மருத்துவரை 41 நாட்கள் பொய் வழக்கில் சிறையில் அடைக்கக் காரணமாக இருந்த பெண்ணுக்கு Criminal Defamation பிரிவின் கீழ் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், அரசு வழங்கும் நிவாரணப் பணத்தைப் பெறுவதற்காகப் பொய் கும்பல் கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணுக்கு 7.5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹2.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அரசு வழங்கிய பணத்தை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகைய அதிரடித் தீர்ப்புகள், பாதுகாப்புச் சட்டங்களை ஆயுதமாக மாற்றுவோருக்கு நீதித்துறை வழங்கும் பலமான எச்சரிக்கையாக மாறியுள்ளன.





