பொதுவாக பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பை முடித்து அதற்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பல ஆண்டுகள் கடுமையான உழைப்பும் தொடர் பயிற்சிகளும் தேவைப்படும். ஆனால், துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞரான லட்சுமணன் மெய்யப்பன், தனது 16 வயதிலேயே இத்தகைய கடினமான இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ‘உலகின் மிக இளைய சாட்டர்ட் அக்கவுண்டன்ட் (ஆண்)’ என்ற புகழ்பெற்ற கின்னஸ் உலக சாதனையை அவர் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த லட்சுமணன், ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தத் தொடங்கினார். நிதித் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டறிந்த அவரது தாய், அவருக்குக் கணக்கு பதிவியலின் அடிப்படை அம்சங்களை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தனது 15-வது வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘அசோசியேஷன் ஆஃப் சார்ட்டர்ட் சர்டிஃபைட் அக்கவுண்டன்ட்ஸ்’ (ACCA) படிப்பிற்கான தயாரிப்புகளில் இறங்கினார்.
பெரும்பாலும் தேர்வர்கள் முடிப்பதற்குப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ACCA படிப்பின் அனைத்து நிலைகளையும், லட்சுமணன் தனது அசாத்திய திறமையால் ஒரே ஆண்டிற்குள் வெற்றிகரமாக முடித்துக் காட்டினார். 16 ஆண்டுகள் 170 நாட்கள் வயதிலேயே இந்தப் பட்டயக் கணக்காளர் தகுதியை எட்டி சாதனை படைத்த அவரை, கின்னஸ் அமைப்பு உலக சாதனையாகப் பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, தனது 18 வயதிலேயே CFA (Chartered Financial Analyst) தகுதியையும் பெற்றுள்ள லட்சுமணன் மெய்யப்பன், தற்போது துபாயில் உள்ள முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் (Senior Research Analyst) பணியாற்றி வருகிறார். “வேகத்தை விடக் கற்றலின் மீதான ஆர்வமே உண்மையான வெற்றியைத் தரும்” என்று கூறும் இவரின் இந்த சாதனை பயணம் உலகெங்கிலும் உள்ள பல இளம் மாணவர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்து வருகிறது.