எம்எல்ஏ முஸ்தபா புகாரில் அதிரடி திருப்பம்: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!

மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், அதிமுக நிர்வாகி P.M. மன்னனை மதுரை நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கைதான முன்னாள் துணை மேயரும், அதிமுக நிர்வாகியுமான மன்னனை காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் சாய், காவல்துறையின் விசாரணை நடைமுறைகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். “நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிவிட்டு, இன்றே எவ்வாறு விசாரணை என்ற பெயரில் கைது செய்ய முடியும்?” என நீதிபதி போலீசாரைக் கடுமையாகக் கண்டித்தார்.

காவல்துறையின் இந்த அவசரக் கைது நடவடிக்கையையும், நடைமுறை முரண்பாட்டையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மன்னனுக்கு ரூ.25,000 சொந்த ஜாமீன் வழங்கி அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். உயர் மட்ட அரசியல் புகார்கள் மற்றும் காவல்துறையின் அவசரக் கைது நடவடிக்கைகள் குறித்த இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.