இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள புதிய 2026 மாருதி சுசுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Brezza Facelift), அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாவதற்கு முன்பே பாதுகாப்பு சோதனையில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் பாரத் NCAP (Bharat NCAP) நடத்திய கடுமையான மோதல் சோதனையில் (Crash Test), புதிய பிரெஸ்ஸா SUV பெரியவர்கள் பாதுகாப்பு (AOP) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (COP) ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே முழுமையான 5-ஸ்டார் (5-Star Rating) பாதுகாப்பு தரச்சான்றிழழைப் பெற்று அசத்தியுள்ளது.
பாரத் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸாவின் ZXi+ 1.5-லிட்டர் ஆட்டோமேட்டிக் வேரியன்ட், மோதல் சோதனைகளில் மிகச் சிறந்த கட்டமைப்பு வலிமையை நிரூபித்துள்ளது. இந்த 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங், வரவிருக்கும் 1.5-லிட்டர் பெட்ரோல், சிஎன்ஜி (CNG) மற்றும் புதிதாக அறிமுகமாகும் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் என அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 32-க்கு 30.41 புள்ளிகளைப் பெற்றுள்ள பிரெஸ்ஸா, பக்கவாட்டு மோதல் சோதனையில் (Side Barrier Test) 16-க்கு 16 முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேபோல், குழந்தைகள் பாதுகாப்பில் 49-க்கு 43 புள்ளிகளைப் பெற்று சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய தலைமுறை கார்களில் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில் புதிய பிரெஸ்ஸாவில் 6 ஏர்பேக்குகள், மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA), ISOFIX சைல்டு சீட் மவுண்ட் ஆகியவை அனைத்து வேரியன்ட்களிலும் தரநிலையாக (Standard) வழங்கப்பட்டுள்ளன. உயர் வேரியன்ட்களில் 360-டிகிரி கேமரா மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ மற்றும் இ-விட்டாராவைத் தொடர்ந்து பாரத் NCAP சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங் பெறும் ஐந்தாவது மாருதி கார் என்ற பெருமையை புதிய பிரெஸ்ஸா பெற்றுள்ளது. டாட்டா நெக்சான், மஹிந்திரா XUV 3XO மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கும் புதிய பிரெஸ்ஸா, இந்த 5-ஸ்டார் செஃப்டி ரேட்டிங் மூலம் காம்பேக்ட் SUV பிரிவில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.





