“படுக்கையில் படுத்த 8 நொடியில் தூக்கம்!” – பிரதமர் மோடியின் ரகசியமும் ‘மிலிட்டரி மெத்தடும்’!

படுக்கையில் படுத்த சில வினாடிகளிலேயே தனக்குத் தூக்கம் வந்துவிடும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறிய கருத்து, நாடு முழுவதும் பலரிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமையும் மன அழுத்தமும் நிறைந்த தற்கால சூழலில், படுக்கையில் படுத்து மணி கணக்கில் தூக்கமின்றித் தவிப்பவர்களுக்குப் பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தை அளித்தன. இருப்பினும், அறிவியல்பூர்வமாகப் பயிற்சி செய்தால் 120 வினாடிகளுக்குள் (2 நிமிடங்கள்) யார் வேண்டுமானாலும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த அதிவேகத் தூக்க நுட்பத்திற்கு ‘மிலிட்டரி மெத்தட்’ (The Military Method) என்று பெயர். இரண்டாம் உலகப் போரின் போது, போர்க்களத்தில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்குக் குறைந்த நேரத்தில் போதிய ஓய்வு தேவைப்பட்டதால், ‘லாயிட் பட் வின்டர்’ (Lloyd Bud Winter) என்பவரால் 1981-இல் எழுதப்பட்ட புத்தகத்தில் இந்த முறை முதன்முதலில் விவரிக்கப்பட்டது. பின்னர் ஷாரன் அக்மேன் (Sharon Ackman) எனும் வலைப்பதிவர் “ஹவ் டு ஃபால் அஸ்லீப் இன் 120 செகண்ட்ஸ்” (How to Fall Asleep in 120 Seconds) என்ற கட்டுரையில் இதுகுறித்துப் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த முறை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய தடுப்பு பழக்கங்கள்!

இந்த மிலிட்டரி மெத்தட் நுட்பத்தைப் பின்பற்ற சில எளிய வழிமுறைகள் உள்ளன. முதலில் படுக்கையில் நேராகப் படுத்து, முகத்தில் உள்ள தசைகள், தாடை மற்றும் கண்ணிமைகளை முழுமையாகத் தளர்த்த வேண்டும். அதன்பின் தோள்பட்டைகளைத் தளர்த்தி, கைகளை உடலின் இருபுறமும் தளர்வாக வைக்க வேண்டும். மூச்சை மெதுவாக வெளியேற்றி, மார்புப் பகுதி மற்றும் தொடைகள், கால்களின் தசைகளைத் தளர்த்த வேண்டும். இறுதியாக, மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளை அகற்ற, அமைதியான ஏரி அல்லது திறந்தவெளியைக் கற்பனை செய்ய வேண்டும். சிந்தனைகள் கட்டுப்படாவிட்டால் “எதையும் யோசிக்காதே” என்ற வார்த்தையை மனதில் 10 வினாடிகள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 6 வாரங்கள் வரை இந்த முறையைப் பயிற்சி செய்தால், 96 சதவீத மக்களுக்கு 2 நிமிடங்களுக்குள் தூக்கம் தழுவும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பிரதமர் மோடி குறிப்பிட்டது போல விரைவாகத் தூங்கும் கலை, முறையான மனக் கட்டுப்பாடு மற்றும் உடலைத் தளர்த்தும் பயிற்சிகளின் மூலமே சாத்தியமாகிறது.