உலகப் புகழ்பெற்ற அமெரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் (MrBeast) என அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், யூடியூப் வரலாற்றிலேயே இதுவரை எந்தவொரு தனிநபர் கிரியேட்டரும் செய்யாத ஒரு இமாலய உலக சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனது பல்வேறு மொழி மாற்று யூடியூப் சேனல்களையும் உள்ளடக்கி, ஒட்டுமொத்தமாக 500 மில்லியன் (50 கோடி) சப்ஸ்கிரைபர்ஸ் என்ற பிரம்மாண்ட எல்லையைக் கடந்த முதல் தனிநபர் என்ற வரலாற்று மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் (Forbes) மற்றும் செலிபிரிட்டி நெட் வொர்த் போன்ற சர்வதேச முன்னணி ஊடகங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, மிஸ்டர் பீஸ்ட்டின் ஒட்டுமொத்த யூடியூப் நெட்வொர்க் மற்றும் பல்வேறு தொழில்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை இந்தியப் பண மதிப்பில் கணக்கிட்டால், ஒரு மாதத்திற்குத் தோராயமாக ரூ. 330 கோடி முதல் ரூ. 415 கோடி வரை ஆகும்.
அவருக்கு யூடியூப் விளம்பரங்கள் (AdSense) மூலமாக மட்டும் இந்த வருமானம் கிடைப்பதில்லை. ‘ஃபீஸ்டபிள்ஸ்’ (Feastables) என்ற அவரது சொந்த சாக்லேட் நிறுவனம், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் பிரம்மாண்ட மெர்சண்டைஸ் (Merchandise) ஆடை விற்பனை மூலமும் இந்த மெகா வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைத் தனது அடுத்தடுத்த வீடியோக்களின் பிரம்மாண்ட செட்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் போட்டிகளுக்காகவே மீண்டும் முதலீடு செய்வதாக மிஸ்டர் பீஸ்ட் பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட்டின் யூடியூப் கரியரிலேயே மிக முக்கியமான மற்றும் அதிக பார்வைகளைப் பெற்ற வீடியோவாக விளங்குவது நெட்ஃபிளிக்ஸ் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “$456,000 Squid Game In Real Life!” வீடியோ ஆகும். தற்பொழுது வரை இந்த ஒரு வீடியோ மட்டுமே 900 மில்லியனுக்கும் (90 கோடி) அதிகமான பார்வைகளைப் பெற்று 1 பில்லியன் வியூஸ் சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஒரு வீடியோவை உருவாக்குவதற்காக மட்டும் மிஸ்டர் பீஸ்ட் இந்தியப் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 29 கோடி (3.5 மில்லியன் டாலர்) வரை செலவு செய்தார். இதில் பிரம்மாண்ட செட்கள் அமைத்தது மற்றும் வெற்றியாளருக்கான ரூ. 3.8 கோடி ($456,000) பரிசுத் தொகையும் அடங்கும். ஆனால், இந்த வீடியோ மூலம் யூடியூப் விளம்பரம் வழியாக மட்டும் ரூ. 25 கோடி முதல் ரூ. 33 கோடி வரையும், ‘ப்ராவல் ஸ்டார்ஸ்’ (Brawl Stars) என்ற மொபைல் கேம் ஸ்பான்சர்ஷிப் மூலம் ரூ. 16 கோடியும் வருமானமாகக் கிடைத்தது.
ஒட்டுமொத்தமாக இந்த ஒரே ஒரு வீடியோ மூலம் மட்டும் அவருக்கு ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை மொத்த வருவாய் கிடைத்துள்ளது. தயாரிப்புச் செலவு போக இந்த ஒரே வீடியோ மூலம் அவருக்குப் பல கோடிகள் லாபமாகக் கிடைத்துள்ளது மட்டுமன்றி, அவரது உலகளாவிய பிராண்ட் மதிப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. ஒரு சாதாரண யூடியூப் சேனலை உலகளாவிய பிசினஸ் எம்பயராக மாற்றிக் காட்டியுள்ள மிஸ்டர் பீஸ்ட்டின் இந்த உத்தி, தற்போதைய இளம் கிரியேட்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாகும்.





