நீட் தேர்வில் இனி தப்பிக்க முடியாது! மோசடியைத் தடுக்க ‘AI’ தொழில்நுட்பத்தை இறக்கிய NTA – விதிமீறினால் வாழ்நாள் தடை!

இந்த ஆண்டு 2026, மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெறயுள்ளது. நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த மிக முக்கியமான தேர்வில், தகுதியான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி தப்பிக்க முடியாது: தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் மற்றும் பிற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம், சந்தேகத்திற்குரிய நபர்களின் செயல்பாடுகள் நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்கப்பட்டு, உடனடியாகத் தேர்வு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

வாழ்நாள் தடை எச்சரிக்கை: முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை என்டிஏ அறிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் மோசடி உறுதியானால், சம்பந்தப்பட்ட நபர் என்டிஏ நடத்தும் எந்தவொரு தேர்விலும் பங்கேற்க முடியாதபடி நிரந்தரமாக (Permanent Ban) தடை விதிக்கப்படும். இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், தேர்வர்கள் எவ்விதத் தவறான வழிகளையும் கையாள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கண்காணிப்பு தீவிரம்: இந்த ஆண்டு முதல் தேர்வு மையங்களில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேர்வை மிகத் துல்லியமாக நடத்தத் திட்டமிட்டுள்ள என்டிஏ, நேர்மையான முறையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இது பெரும் பாதுகாப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment