ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கிய உப ஆலயங்களின் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தற்பொழுது அப்பலாயகுண்டாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவப் பெருவிழா வரும் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த mகா பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நிகழ்வாகக் கோவிலைச் சுத்தப்படுத்தும் பாரம்பரிய ஆன்மீக தூய்மைப் பணியான ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’ ஜூன் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது. அன்று காலை சுப்ரபாதம், தோமால சேவை, கொலுவு மற்றும் அர்ச்சனை ஆகிய காலை வழிபாட்டு முறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து காலை 8:00 மணி முதல் 10:30 மணி வரை இந்தத் தூய்மைப் பணி பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும். இந்தத் தூய்மைப் பணிகளின் போது மூலவர் சன்னதி உட்படக் கோவில் வளாகம் முழுவதும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீரால் சுத்தம் செய்யப்படுவதால் அன்று காலை பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி இருக்காது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிறைவடைந்த பின்னர் அன்று காலை 11:00 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த ஒன்பது நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆர்ஜித கல்யாணோற்சவம் ஜூன் 28 ஆம் தேதியும், பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான மகா கருட சேவை ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் ஜூலை 2 ஆம் தேதி பிரம்மாண்ட ரதோற்சவமும், விழாவின் இறுதி நாளான ஜூலை 3 ஆம் தேதி சக்ரஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான ஆண்டுப் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. இந்த ஒன்பது நாட்களும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருள் பெற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.





