தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் காட்டிய ஆர்வம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் சாலை வசதி இல்லாத நிலையில், அங்குள்ள மக்கள் படகு மூலமாக அணையைக் கடந்து வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
இன்று காலை முதலே தச்சமலை, முடவன்வயல், மாராமலை உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குழுக்களாகப் படகுகளில் ஏறினர். குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளைத் கையில் ஏந்தியபடி தாய்மார்களும், தள்ளாத வயதிலும் முதியவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அணையைக் கடந்து வந்து வாக்குச் சாவடியைச் சென்றடைந்தனர். போக்குவரத்து வசதிகள் சவாலாக இருந்தாலும், ஒரு வாக்கு கூட வீணாகக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் இந்தப் பகுதி மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுவாகும். இருப்பினும், இந்த ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில், இவர்களுக்காகப் படகு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அணையைக் கடந்து வந்த பிறகு, அங்கிருந்து பல கிலோமீட்டர் நடந்தே சென்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மக்களின் இந்த அர்ப்பணிப்பு ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்துகிறது. அடிப்படை வசதிகள் தேவையைக் கோரிக்கையாக முன்வைத்தாலும், தேர்தல் என்று வரும்போது தவறாமல் தங்களது உரிமையை நிலைநாட்டும் இந்த மலைக்கிராம மக்களின் செயல், நகர்ப்புற வாக்காளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் அணைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.





