அரசியல் கருத்துகளால் சினிமா வாய்ப்புகளை இழந்த பிரகாஷ் ராஜ்: வெளிப்படையாகப் பேசிய மனைவி போனி வர்மா!

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், அதனால் அவர் தனது திரையுலக வாழ்க்கையில் பல கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளதாக அவரது மனைவியும், பிரபல நடன இயக்குநருமான போனி வர்மா தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடிகர் பிரகாஷ் ராஜை உளவியல் ரீதியாக மிகவும் உலுக்கியதாகவும், அந்தத் துயரச் சம்பவமே அவர் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து வெளிப்படையாகப் குரல் கொடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் போனி வர்மா விவரித்துள்ளார். மேலும், அரசின் கொள்கைகளை எதிர்த்து ‘#JustAsking’ என்ற ஹேஷ்டேக் மூலமாக அவர் கேள்விகளை எழுப்பத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தத் துணிச்சலான நிலைப்பாடுகளாலும் நேரடியான அரசியல் விமர்சனங்களாலும் பிரகாஷ் ராஜுக்கு வர வேண்டிய பல சினிமா வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளதாக போனி வர்மா வேதனை தெரிவித்துள்ளார். சில தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்த பிறகும் கூட, திரைப்படங்களில் இருந்து அவரை விலக்கிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பல வணிக விளம்பர ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் தனது மனசாட்சிக்குச் சரியெனப்பட்ட கொள்கைகளுக்காகத் திரையுலகில் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளதாகவும், எங்குத் தவறு நடந்தாலும் அதனைத் தட்டிக் கேட்பதை அவர் ஒருபோதும் நிறுத்துவதில்லை என்றும் போனி வர்மா பெருமிதத்துடன் கூறினார். பிரகாஷ் ராஜின் இந்தத் துணிச்சலான அரசியல் பயணம் மற்றும் அதற்காக அவர் எதிர்கொண்ட தொழில்முறைச் சோதனைகள் தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.