“லத்தி அடிக்கு பயப்படாதீங்க!” தொண்டர்களுக்கு ராகுல் காந்தி தைரியம்; தலைவர்களுக்குத் தனி எஸ்கேப் கேட்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றுத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் ‘சலோ தில்லி’ பிரம்மாண்ட பேரணியைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த பேரணிக்காகத் தொண்டர்களைத் திரட்டும் நோக்கில் சமூக வலைதளத்தில் உணர்ச்சிமிக்கப் பதிவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்குமான போராட்டம் அல்ல; இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமாரின் அக்கிரமங்களால் சோர்ந்துபோன அத்தனைப் பொதுமக்களும், மாணவர்களும் அச்சமின்றி எங்களுடன் திரண்டு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் தொண்டர்களுக்குத் தைரியம் ஊட்டும் வகையில், “காவல்துறையைப் பார்த்தோ, அவர்களின் லத்திகளைக் கண்டோ யாரும் அஞ்சத் தேவையில்லை; பாஜகவுக்கு எந்த வம்பிலும் ஈடுபட தைரியம் இருக்காது” என்றும் ராகுல் காந்தி வீர வசனம் பேசியுள்ளார். ஆனால், களத்தில் நடக்கும் யதார்த்தத்தைப் பார்த்தால் தான் இந்திய அரசியலின் ஆகப்பெரிய வேடிக்கை புரிகிறது! மேடையில் நின்று “லத்திக்கு பயப்படாதீங்க, அடியை வாங்குங்க” என்று தொண்டர்களையும் மாணவர்களையும் உசுப்பேற்றி முன்னால் தள்ளும் தலைவர்களுக்கு, ஒரு சிறு கீறல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் தில்லி காவல்துறை மிகக் கவனமாக உள்ளது.

சுமார் 50,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த பேரணிக்காக 3,000 காவல்துறையினர், AI தொழில் நுட்பத்துடன் கூடிய 150 நவீன சிசிடிவி கேமராக்கள், பாடி கேமராக்கள் என ராம்லீலா மைதானத்தையே ஒரு கோட்டையாகத் தில்லி காவல்துறை மாற்றியுள்ளது. இதில் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பேரணியில் ஏதேனும் சலசலப்போ அல்லது லத்தி அடியோ விழுந்தால், ராகுல் காந்தி உள்ளிட்ட விவிஐபி தலைவர்கள் எவ்விதச் சேதாரமும் இன்றிப் பத்திரமாக ஏசி காரில் ஏறித் தப்புவதற்காக ராம்லீலா மைதானத்தில் பிரத்யேக ‘எஸ்கேப் கேட்’ (Gate reserved for VVIP Evacuation) அமைத்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது!

ஜந்தர் மந்தர் பகுதி ஏற்கனவே போராட்டப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால், பேரணிக்கு வரும் அப்பாவித் தொண்டர்கள் அங்கிங்கே நகர முயன்றால் காவல்துறையின் லத்தி அடியையும் வட்டர் கேனன்களையும் வாங்குவது உறுதி. ஆனால், “வாருங்கள் ஒன்றிணைந்து போராடுவோம்” என்று அழைப்பு விடுத்த தலைவர்களோ, காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள், பிரத்யேக விஐபி வழியில் எவ்வித அடியும் படாமல் பத்திரமாக வீடு திரும்புவார்கள்! தொண்டர்களின் முதுகுக்கு லத்தி அடியும், தலைவர்களின் கார்களுக்கு பட்டுப் போன்ற பாதுகாப்பும் கொடுக்கும் இந்தத் ‘தேசிய அரசியல் கலை’ வரும் நவம்பர் 1 பேரணியிலும் மிகச் சிறப்பாக அரங்கேறவுள்ளது!