சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! செல்போனிலேயே அனைத்து சேவைகளும் பெற “சபரி போர்ட்டல்” அறிமுகம்!

சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளையும், தகவல்களையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் பெறும் வகையில் “சபரி போர்ட்டல்” (sabariportaldcpta.in) மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் வசதியை கேரள வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில்குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தில் உள்ள பக்தர்களுக்குப் பெரும் உதவியாக அமையும்.

காணாமல் போனோர் தேடுதல் மற்றும் பொருட்கள் மீட்பு

கூட்ட நெரிசலில் குழந்தைகளையோ, முதியவர்களையோ தவறவிட்டால் அல்லது கைபேசி போன்ற பொருட்களை இழந்தால் போர்ட்டல் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம். புகைப்படங்களை இணைத்து அளிக்கப்படும் இந்தப் புகார்கள் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப்பில் தகவல்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.

‘சபரி மேப்’ மற்றும் நேரலைச் சேவைகள்

தனியாக ஆப் (App) எதுவும் பதிவிறக்கம் செய்யாமல் உலாவி (Browser) மூலமாகவே பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ‘சபரி மேப்’ வசதி மூலம் கூகுள் மேப்ஸ் உதவியுடன் அருகிலுள்ள குடிநீர் மையங்கள், கழிப்பறைகள், முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ், காவல் நிலையங்கள் மற்றும் ஏடிஎம் மையங்களைக் கண்டறியலாம். மேலும், பம்பை திரிவேணி ஆற்றுநீரின் மட்டம், குளிக்கும் வசதி நிலை, தரிசன காத்திருப்பு நேரம், பூஜை நேரங்கள் மற்றும் மெய்நிகர் வரிசை (Virtual Queue) முன்பதிவு இணைப்புகளும் இதில் அடங்கும்.

பேருந்து, ரயில் நேரங்கள் மற்றும் விலைக் கண்காணிப்பு

பம்பையிலிருந்து இயக்கப்படும் கேஎஸ்ஆர்டிசி (KSRTC) பேருந்துகள், நிலக்கல்-பம்பை செயின் சர்வீஸ்கள் மற்றும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் புறப்படும் பேருந்துகளின் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம் ரயில் நிலையங்களின் ரயில் அட்டவணைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

வியாபாரிகள் அதிக விலை வசூலிப்பதைத் தடுக்க ‘செக் மை பில்’ (Check My Bill) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த பொருட்கள் விலைப்பட்டியலைச் சரிபார்த்து, கூடுதல் விலை வசூலித்தால் கடைகள் மீது உடனடியாகப் புகார் அளிக்கலாம். மேலும், அவசர உதவி எண்களான 112, 1077, 108, 100, 101 ஆகியவற்றை போர்ட்டல் மூலமாகவே நேரடியாக அழைக்க முடியும்.

குறைந்த செலவில் அரசு அதிகாரிகளின் சாதனை

தனியார் மென்பொருள் நிறுவனங்களை நம்பியிருக்காமல், பத்தனம்திட்டா ஆட்சியர் அலுவலகத்தின் இளநிலை கண்காணிப்பாளர் அஜித் சீனிவாஸ் மற்றும் நில வருவாய் ஆணையரகத்தின் வருவாய் ஆய்வாளர் யாகேஷ் பி. ஆகிய இரு அரசு அதிகாரிகள் தங்களின் வழக்கமான பணி நேரத்திற்குப் பிறகு இரவிலும் விடுமுறை நாட்களிலும் உழைத்து இந்த போர்ட்டலை உருவாக்கியுள்ளனர்.

நிர்வாக ரீதியாகத் தூய்மைப் பணியாளர்களின் செயல்பாடு, அவசரக் கட்டுப்பாட்டு மையங்களின் நிகழ்நேரக் கண்காணிப்பு, பணியாளர்களின் வருகைப் பதிவு மற்றும் ஜியோஃபென்சிங் (Geofencing) தொழில்நுட்பம் மூலம் புகார்களைத் துல்லியமாக வகைப்படுத்துதல் போன்ற பல அதிநவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு இச்சேவை மிகப்பெரிய பயனை அளிக்கும்.