ஹோர்முஸ் நீரிணையில் சவுதி கப்பல் மீது தாக்குதல் முயற்சி: 3 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சவுதி அரேபியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சி சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தான சூழலில், கப்பலில் பணியாற்றிய மூன்று இந்திய மாலுமிகள் உட்பட அனைவரும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்ர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியக் கொடியுடன் பயணித்த ‘என்சிசி ஃபஜ்ர்’ (NCC FAJR) என்ற எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் மேற்கு ஆசிய பதற்றங்களுக்கு மத்தியில், வர்த்தகக் கப்பல்கள் குறிவைக்கப்படுவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகளாவிய பெட்ரோலியப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கையாளும் மிக முக்கியமான கடல் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாதையில் வர்த்தகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அமைச்சர் சோனோவால், நிலைமையை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், மாலுமிகளின் தொடர் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பும் இப்பகுதியில் இதே போன்றதொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.