“ஆத்துல நுரை வர்றதுக்கு ஷாம்பூவா?” சுற்றுச்சூழல் அமைச்சர் வி.கே. ராஜீவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜூ!

மேற்குத் தொடர்ச்சி மலையின் பூம்பாறைப்பகுதியில் உற்பத்தியாகி கோவையின் வழியாகக் காவிரிக்கு உயிரூட்டும் நொய்யல் ஆறு, இன்றைக்குத் திருப்பூர் மற்றும் கோவை சாயப் பட்டறைகளின் கட்டுப்பாடற்ற ரசாயனக் கழிவுகளாலும், சுத்திகரிக்கப்படாத நகராட்சிப் பாதாள சாக்கடைநீராலும் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது. சுண்ணாம் புக்கால்வாய் பகுதியில் ஆற்றில் பல அடி உயரத்திற்கு விஷ நுரை பனிப்போலப் பெருக்கெடுத்து ஓடுவதும், சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் தோல் நோய்களால் அவதிப்படுவதும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆனால், இந்த ஆபத்தான சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுப்பதற்குப் பதிலாக, தவெக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் வி.கே. ராஜீவ் அளித்துள்ள விளக்கம் தான் இப்போது மொத்த மாநிலத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

“ஆற்றில் நுரை பொங்குவதற்குக் தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல; மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்பும் சாம்பூவும் தான் காரணம்” என்று சுற்றுச்சூழல் அமைச்சர் வி.கே. ராஜீவ் எந்தவிதக் கூச்சமும் இன்றிப் பேட்டியளித்திருந்தார். இதைக் கையில் எடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஆளும் அரசின் போலித்தனமான அறிவியலை உரித்துத் தொங்கவிட்டுள்ளார். “இது உலகமகா கண்டுபிடிப்புங்க! உலகம் பூரா இருக்கிற மக்கள் குளிக்கிற சோப்பும் சாம்பூவும் தான் நொய்யல் ஆத்து நுரைக்குக் காரணம்னு கண்டுபிடிச்ச நம்ம சுற்றுச்சூழல் அமைச்சர் வி.கே. ராஜீவுக்கு உடனடியாக நோபல் பரிசே கொடுக்கலாம்! என்ன பரிசு? நோபல் பரிசுதான் கொடுக்கணும்!” என்று தன் பாணியில் நக்கலடித்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்தார்.

தன் மீதான பழைய விமர்சனங்களைக் சுட்டிக்காட்டி ஆவேசமடைந்த செல்லூர் ராஜூ, “வைகை ஆத்துல நீர் ஆவியாகாம இருக்க அதிகாரிகள் சொன்ன பேச்சைக் கேட்டு நான் தெர்மாகோல் அட்டையை மிதக்க வச்சப்ப என்னை சோஷியல் மீடியால வச்சு செய்யாத ஆள் இல்லை. ‘ஈஜிப்ட்’னு தப்பா சொன்னதுக்கே என் சோலியை முடிச்சீங்க! ஆனா, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் கக்கி விடுற நச்சுக்கழிவை மறைக்க, சர்வ சாதாரணமா மக்கள் குளிக்கிற சாம்பூ தான் ஆத்து நுரைக்குக் காரணம்னு ஒரு கேபினெட் அமைச்சர் கூசாமக் பொய் சொல்றாரே… இப்ப அந்த நெட்டிசன்களும், தவெக அரசுக்குச் சொம்படிக் கிறவங்களும் எங்க போனாங்க?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் வி.கே. ராஜீவ், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முடுக்கிவிட்டுச் சட்டவிரோதச் சாயப் பட்டறைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் துப்பியில்லாமல், பொதுமக்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்ப்பது அப்பட்டமான நிர்வாகச் சீர்கேடாகும். ஒரு நதியின் மரண ஓலத்தை மூடி மறைக்க ‘சாம்பூக் கதை’ அளக்கும் இந்த அரசை நோக்கிச் செல்லூர் ராஜூ வீசியுள்ள இந்த எள்ளல் கணை, தவெக தலைமைக்கும் சுற்றுச்சூழல் துறைக்கும் மிகப்பெரிய அரசியல் நெருக்குதலை உருவாக்கியுள்ளது.