டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்ற கேள்விதான் இப்போது தேசிய அரசியலின் ஆகப் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. ராகுல் காந்தி டெல்லியில் இல்லையாம், விமானமேறி வியட்நாமுக்குச் சென்றுவிட்டாராம் என்று ஆளும்கட்சியான பாஜக வீடியோ ஆதாரங்களைப் பகிர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்துக் காங்கிரஸ் எம்பி சசி தரூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குத் வழக்கமான தனது பாணியில் சசி தரூர் அளித்த பதில் என்ன தெரியுமா? “நான் ஒன்றும் ட்ராவல் ஏஜென்ட் இல்லை. என்னிடம் வந்து அவர் எங்கே போனார், எப்போது திரும்புவார் என்றெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?” என்பதுதான்!
தலைநகரில் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரியும்போது, போராட்ட முன்னணியில் நிற்க வேண்டிய ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு ‘வெகேஷன்’ சென்றுவிட்டார் என்பது பாஜகவின் பிரதான குற்றச்சாட்டு. “பொய்களைக் கூவி அலுத்துப் போனதால் ராகுல் காந்தி ஓய்வெடுக்க பறந்துவிட்டார்” என்று பாஜக கிண்டலடிக்க, “ராகுல் காந்தி எங்கு செல்கிறார் என்பதை ஏன் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறீர்கள்? பிரதமர் மோடி பேட்டி அளிக்காத இடத்தில் ராகுல் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் உரையாடுகிறார்” என்று சந்தீப் தீட்சித் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால், சொந்தக் கட்சித் தலைவரின் பயணத் திட்டங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்க சசி தரூர் தயாராக இல்லை என்பதை அவருடைய “ட்ராவல் ஏஜென்ட்” பதில் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது. நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள், போராட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ராகுல் காந்தி திடீரென மாயமாகி வெளிநாடுகளுக்குப் பறப்பதும், அதுவே பாஜகவுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற அரசியல் ஆயுதமாக மாறுவதும் இது ஒன்றும் முதன்முறையல்ல. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பான நாற்காலியில் அமர்ந்திருப்பவர், இக்கட்டான அரசியல் சூழலில் ஏன் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கைதான்.
அதை நேர்மையாக எதிர்கொள்ளாமல், “யார் எங்கே போனால் உங்களுக்கென்ன?” என்று மழுப்புவதும், தரூர் பாணியில் விலகிச் செல்வதும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பலவீனத்தையே அம்பலப்படுத்துகிறது. ராகுலின் இந்த ரகசியப் பயணங்கள் பாஜகவின் விமர்சனப் பசிக்குத் தீனியாக மாறுகிறதே தவிர, காங்கிரஸுக்கு எவ்விதத்திலும் பலன் தருவதாக இல்லை!