அரசு உத்தரவாதத்துடன் கூடிய சவரன் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குத் தங்கம் போல் பிரகாசிக்கும் மாபெரும் லாபம் கிடைத்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் தங்கப் பத்திரங்களை வாங்கிய முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டின் மூலம் சுமார் 200 சதவீதத்திற்கும் மேலாக லாபம் ஈட்டியுள்ளதை உறுதி செய்யும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்கூட்டியே பணமாக்குவதற்கான (Premature Redemption) அதிகாரப்பூர்வ ரிடேம்ப்ஷன் விலையை அறிவித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் ‘சீரிஸ் VII’ சவரன் கோல்ட் பாண்டுகளின் முன்கூட்டியே பணமாக்கும் தேதியை நவம்பர் 2-ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட் (ஒரு கிராம்) தங்கப் பத்திரத்திற்கான முன்கூட்டிய ரிடேம்ப்ஷன் விலை ரூ.14,167 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-இல் இந்த பாண்டுகள் வெளியிடப்பட்ட போது, ஆஃப்லைனில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,765 ஆகவும், ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ரூ.50 தள்ளுபடியுடன் ரூ.4,715 ஆகவும் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய ரிடேம்ப்ஷன் விலையின்படி, ஆன்லைனில் முதலீடு செய்தவர்களுக்குக் கிராமுக்கு மட்டும் சுமார் ரூ.9,452 நிகர லாபமாகக் கிடைத்துள்ளது.
அதாவது, 2021-இல் இந்தத் தங்கப் பத்திரத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு, தற்போது முன்கூட்டியே பணமாக்கும் போது முதலீட்டுத் தொகையுடன் சேர்த்து சுமார் ரூ.3.09 லட்சம் வரை கைக்குக் கிடைக்கும். இது தவிர, மூல முதலீட்டிற்கு ஆண்டுக்கு 2.5% வட்டித் தொகையும் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் தனியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகச் சவரன் கோல்ட் பாண்டுகளின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள் என்றாலும், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு முதலீட்டாளர்கள் முன்கூட்டியே பணமாக்கிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. இந்திய புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வெளியிட்ட 999 தூய்மை கொண்ட தங்கத்தின் சராசரி முடிவின் அடிப்படையில் இந்த ரிடேம்ப்ஷன் விலை கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.