Stray Dog Menace: திருவள்ளூரில் ஓட ஓட விரட்டி கடித்த தெருநாய்; பெண் தூய்மை பணியாளர் உள்பட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி! காக்களூரில் பரபரப்பு!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தெருநாய் ஒன்று குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்ததில், நகராட்சி பெண் தூய்மை பணியாளர் உட்பட 18 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காக்களூர் பகுதியில் நேற்று வழக்கம்போல் பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென வெறிபிடித்தது போல் அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியது.

அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி பெண் தூய்மை பணியாளர் ஒருவரை அந்த நாய் எதிர்பாராத விதமாக மிகக் கொடூரமாகக் கடித்தது. அவரைத் தொடர்ந்து, சாலையில் நடந்து சென்றவர்கள், வீட்டின் வாசலில் நின்றவர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் அந்த நாய் கடித்துக் குதறியது. இந்தத் திடீர் தாக்குதலால் நிலை குலைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

நாயின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பலரையும் அது விடாமல் துரத்திச் சென்று கடித்ததில், மொத்தம் 3 பெண்கள் உட்பட 18 பேர் உடலின் பல்வேறு இடங்களில் படுகாயமடைந்தனர்.

இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற பொதுமக்கள், தடிகளுடன் திரண்டு வந்து அந்த நாயை விரட்டினர். தொடர்ந்து, நாய் கடியால் ரத்தக் காயங்களுடன் துடித்த தூய்மைப் பணியாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 18 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு அவசரப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, நாய் கடிக்கான தடுப்பூசிகளைச் செலுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு அதிகாரிகள் உடனடியாக தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.