தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்து 94.31 விழுக்காடாகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று தங்களது கல்வி ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரால்களின்படி, இந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவிகளில் 96.47 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுபுறம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15 விழுக்காடாக உள்ளது. இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 4.32 விழுக்காடு கூடுதலாகத் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி 93.80 விழுக்காடாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 0.51 விழுக்காடு உயர்ந்து 94.31 விழுக்காட்டை எட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியான தேர்ச்சிப் பட்டியலில் இந்த முறை புதுக்கோட்டை மாவட்டம் 97.57 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தைப் பெற்று ஒட்டுமொத்த தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அதேபோல், பள்ளி வாரியான தேர்ச்சியில் அரசுப் பள்ளிகள் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளன. தமிழகம் முழுவதிலும் உள்ள 1,931 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்று வியக்க வைத்துள்ளன. மேலும், 3,463 அரசுப் பள்ளிகள் 95 விழுக்காட்டிற்கும் அதிகமான தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டு பாட வாரியாக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
-
தமிழ் – 98.43%
-
ஆங்கிலம் – 99.44%
-
கணிதம் – 97.36%
-
அறிவியல் – 98.00%
-
சமூக அறிவியல் – 97.93%
மேலும், நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அறிவியலில் அதிகபட்சமாக 10,476 பேர் 100-க்கு 100 வாங்கி அசத்தியுள்ளனர். சமூக அறிவியலில் 3,336 பேரும், கணிதத்தில் 3,194 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும், தமிழில் 34 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,774 மாணவ, மாணவிகள் உட்பட ஒட்டுமொத்தமாக 17,132 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று தங்களது பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.