வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் அத்தியாவசியக் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் குடும்பச் செலவைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்புத் திட்டம்’ என்ற பெயரிலான இந்த முயற்சியின் கீழ், வெறும் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்தச் சிறப்பு விற்பனைத் திட்டம் நாளை (நவம்பர் 5) முதல் தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக் காலத்தில் இந்தச் சலுகையைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கூட்டுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சுமார் 2.6 கிலோ எடைகொண்ட இந்தச் சிறப்புத் தொகுப்பில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் முக்கியக் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அரை கிலோ பெரிய வெங்காயம், அரை கிலோ தக்காளி, கால் கிலோ கத்தரிக்காய் மற்றும் கால் கிலோ உருளைக்கிழங்கு ஆகியவை அடங்கும்.
இவற்றுடன் 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு முழுத் தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை ஒரே தொகுப்பாக வழங்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தனித்தனியாகத் தேடி வாங்குவதைத் தவிர்த்து, ஒரே இடத்தில் குறைந்த விலையில் பெற இது வழிவகுக்கும்.
இந்த வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பானது தமிழ்நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட 218 கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.
இத்தொகுப்பு ஒன்றுக்கு ரூ.100 என்ற குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், கூடுதல் தொகையோ அல்லது குறைவான தொகையோ வசூலிக்கக் கூடாது என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விற்பனை மையங்களில் பொதுமக்கள் சிரமமின்றி வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.