இந்தியாவில் இ-செல்லான் (e-challan) கணினி முறை மூலமாக அதிக அளவில் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை 30 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 6.37 கோடி (63.7 மில்லியன்) இ-செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்படியானால் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த மாநிலம் என்ற கேள்வி எழுகிறதா? இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலம் 7.89 கோடி (78.9 மில்லியன்) இ-செல்லான்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் 4.71 கோடி செல்லான்களுடன் டெல்லி 3வது இடத்திலும், 4.58 கோடி செல்லான்களுடன் கேரளா 4வது இடத்திலும், 1.99 கோடி செல்லான்களுடன் குஜராத் 5வது இடத்திலும் உள்ளன. நாட்டின் மொத்த இ-செல்லான் வழக்குகளில் 20 சதவீதத்தை உத்தரப் பிரதேசம் மட்டுமே கொண்டுள்ளது.
நிலுவையில் உள்ள அபராதத் தொகையைப் பொறுத்தவரை தமிழ்நாடு பெருமளவு நிலுவைகளை வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் ₹1,13,315 கோடியும், டெல்லி ₹1,10,760 கோடியும் செலுத்தப்படாத அபராதத் தொகையைக் கொண்டு முதலிடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்கள் மட்டுமே ₹1 லட்சம் கோடி நிலுவைத் தொகையைக் கடந்துள்ளன. ஆனால், 2வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு செலுத்தப்படாத அபராதத்தில் ₹3,601 கோடியுடன் (8.14%) மிகக் குறைந்த அளவிலான நிலுவையையே வைத்துள்ளது. மறுபுறம் லடாக்கில் வெறும் 598 செல்லான்களும், ₹2,500 மட்டுமே நிலுவைத் தொகையாகவும் பதிவாகி நாட்டின் மிகக் குறைந்த விதிமீறல் பகுதியாக உள்ளது.
இவ்வாறு நாடு முழுவதும் மலை போல் குவிந்து வரும் செலுத்தப்படாத இ-செல்லான் அபராதங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, மத்திய மோட்டார் வாகன (3வது திருத்தம்) விதிகள் 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ், ஒரு ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் (Driving License) ரத்து செய்யப்படும். மேலும், நிலுவையில் உள்ள இ-செல்லான்களைச் செலுத்தும் வரை வாகனப் பதிவு அல்லது உரிமம் சார்ந்த எந்தவொரு சேவையையும் பெற முடியாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.





