தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் தொடர்ந்து நடத்துவதில் உள்ள நிதி நெருக்கடிகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், சினிமா டிக்கெட் கட்டணம் மற்றும் திரையரங்கு இயக்க நேரங்களில் மாற்றங்களைச் செய்யக் கோரி தமிழ்நாடு திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மாநில அரசிடம் மனு அளித்துள்ளது.
திரையரங்குகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பராமரிப்பு வசதிகள் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் இந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
பராமரிப்புக் கட்டணம் உயர்வு கோரிக்கை
தற்போது ஒரு சினிமா டிக்கெட்டுக்கு திரையரங்கு பராமரிப்புக் கட்டணமாக (Theatre Maintenance Charge – TMC) ₹6 வசூலிக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் நவீன தொழில்நூட்பக் கருவிகளைப் பராமரிப்பது, மின்சாரக் கட்டணம் உயர்வு மற்றும் தூய்மைப் பணிகளுக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பராமரிப்புக் கட்டணத்தை ₹6-லிருந்து ₹10-ஆக உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல, வரிகள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் இல்லாமல் தற்போதைய அதிகபட்ச டிக்கெட் விலையான ₹150 என்பதை ₹250 ஆக உயர்த்தவும், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீத கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் காட்சிகள்
திரையரங்குகளில் திரையிடல் நேரத்தைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்ற தற்போதைய உச்சவரம்பை மாற்றாமல் தக்கவைத்துக்கொள்ள சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், திரையரங்குகளை இயக்குவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரத்தை காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி என்பதற்குப் பதிலாக, காலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் பெரிய திரைப்படங்களின் வெளியீட்டு நாட்களில் கூட்ட நெரிசலைச் சீரமைக்கவும், ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தை மேம்படுத்தவும் இயலும் என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசு விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.