தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபான விற்பனை நிலையங்களில், என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் விநியோகம் செய்து வந்த 11 பிரபல மதுபான பிராண்டுகளின் விற்பனை மற்றும் விநியோகத்திற்குத் டாஸ்மாக் நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாறுபட்ட செயற்கை சுவையூட்டிகள் (Artificial Flavors) சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விஎஸ்ஓபி எக்ஸா கோல்டு பிராந்தி, லூயிஸ் வெர்னண்ட் எக்ஸ்.ஓ., எம்.சி. விஎஸ்ஓபி பிராந்தி, எண்.1 எம்.சி. மெக்டவல்ஸ், மென்ஸ்கிளப், ஹனிபீ, என்ரிக்கா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ., என்ரிக்கா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி, வீரன் மற்றும் ஓல்டு இண்டி ஆகிய 11 பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு மாற்றப் பணிகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும், இந்தத் தடை விவகாரம் மற்றும் பின்னணியில் தடையை நீக்கிய நடவடிக்கைகளில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே.விக்னேஷ் மீது சில விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
தற்போது இச்சம்பவம் குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளும், தடையை நீக்கிய உத்தரவுகளும் மத்திய அரசின் FSSAI அமைப்பினாலேயே நேரடியாக எடுக்கப்பட்டவையாகும். தங்களது தயாரிப்புகளை 30 நாட்களுக்குள் FSSAI விதிகளுக்கு உட்பட்டு முறைப்படுத்துவதாக அந்தத் தனியார் நிறுவனம் அளித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழியின் பேரிலேயே FSSAI தடையை விலக்கிக் கொண்டது.
FSSAI அமைப்பின் சட்டப்பூர்வ அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் மட்டுமே டாஸ்மாக் அதிகாரிகள் களத்தில் செயல்படுத்தியுள்ளனர். இதில் அமைச்சரின் தனிப்பட்ட தலையீடோ அல்லது தன்னிச்சையான முடிவோ எதுவுமில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்களும் உண்மைகளும் அறியாமல், அமைச்சர் மீது அரசியல் ரீதியாகப் பழிசுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்த விளக்கத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.