தமிழ்நாட்டில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) அதிகாரப்பூர்வமாக வெளியாகின்றன. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (DME) கீழ் இயங்கும் மருத்துவத் தேர்வுக் குழு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு பட்டியலை (Provisional Allotment List) வெளியிடுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை விருப்பமான இடங்களை தேர்வு செய்து உறுதிப்படுத்த (Choice Filling and Locking) கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலவரப்படி, இன்று முடிவு அறிவிக்கப்பட்டு சேர்க்கை ஆணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
இந்த முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறத் தகுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் அனைத்தும் பெறப்படவுள்ளன. அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி நிறுவனங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் (Management Quota) கணிசமான அளவிற்கு மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களின் சேர்க்கைக் கடிதத்தை (Allotment Order) அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் தேவையான அசல் சான்றிதழ்களுடன் சென்று சேர்வதற்கு செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.





