“மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை!” – எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026: விண்ணப்பிப்பது எப்படி?

நாடெங்கிலும் உள்ள ஏழை எளிய மற்றும் திறமைமிக்க மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு அமைப்பான எஸ்பிஐ ஃபவுண்டேஷன் (SBI Foundation) ‘எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026–27’ (SBI Platinum Jubilee Asha Scholarship 2026–27) திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கியின் தலைவர் திரு. சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி அவர்களால் ஜூலை 22 அன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 25,707 மாணவர்கள் நேரடியாகப் பலனடைவார்கள்.

இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள், இளங்கலை (UG), முதுகலை (PG), மருத்துவக் கல்வி (MBBS), ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் படிப்பு நிலைக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை நிதி உதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பல்வேறு பிரிவுகளுக்கான நிதி உதவி விவரம்:

  • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள்: ரூ.15,000

  • சிறந்த நிறுவனங்களில் யுஜி (UG) மாணவர்கள்: ரூ.75,000

  • முதுகலை (PG) மாணவர்கள்: ரூ.1,50,000

  • மருத்துவக் கல்வி (MBBS) மாணவர்கள்: ரூ.2,00,000

  • ஐஐடி (IIT) மாணவர்கள்: ரூ.2,00,000

  • ஐஐஎம் (IIM) மாணவர்கள்: ரூ.5,00,000

  • வெளிநாட்டு உயர்கல்வி மாணவர்கள்: ரூ.15,00,000

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "மாணவர் சேர்க்கை தொடக்கம்!" தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; கடைசித் தேதி எப்போது?

கல்வி மற்றும் வருமானத் தகுதிகள்: விண்ணப்பிக்கும் மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது 7.5 CGPA பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 10% தளர்வு அளிக்கப்பட்டு 65% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும், பிற உயர்கல்விப் பிரிவினருக்கு ரூ.6 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  1. தகுதியுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான sbiashascholarship.co.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும்.

  2. இணையதளத்தில் பதிவு செய்து உங்களுக்கான கணக்கை உருவாக்கிய பிறகு லாகின் செய்யவும்.

  3. நீங்கள் பயிலும் கல்விப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களைத் துல்லியமாக நிரப்பவும்.

  4. முந்தைய ஆண்டின் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, குடும்ப வருமானச் சான்றிதழ், நடப்பு ஆண்டு சேர்க்கை/கட்டண ரசீது, புகைப்படங்கள் மற்றும் வங்கிப் பாஸ்புக் நகல் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும்.

  5. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கச் செப்டம்பர் 4-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் நிதி நிலைமையின் அடிப்படையில் முதற்கட்டப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தொலைபேசி நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு இறுதியான தகுதிப் பட்டியல் வெளியாகும்.