இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET PG 2026) எப்போது நடைபெறும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்களின் எதிர்பார்ப்புக்குத் தற்பொழுது அதிகாரப்பூர்வமான விடை கிடைத்துள்ளது. நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நீட் முதுகலை தேர்வு கணினி வழியில் (CBT) நடத்தப்படும் எனத் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 1 ஆம் தேதி மாலை முதல் தொடங்கியுள்ள நிலையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 21 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேர்வு தேதியோடு சேர்ந்து இந்த முறை தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ள சில அதிரடியான புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தான் மருத்துவ மாணவர்கள் மத்தியில் தற்பொழுது மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. வழக்கமாகத் தேர்வுக்கான நகரங்களை (Test Cities) தேர்வு செய்யும் போது “முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை” (First-Come, First-Served) என்ற நடைமுறை தான் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டிலிருந்து அந்த சிஸ்டம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக வாரியம் அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் எவ்வளவு சீக்கிரம் விண்ணப்பித்தாலும் உங்களுக்கு எந்தவித கூடுதல் முன்னுரிமையும் தேர்வு மைய ஒதுக்கீட்டில் கிடைக்காது.

இதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர்கள் தங்களது இருப்பிட முகவரியின் அடிப்படையில் மூன்று விருப்ப மாநிலங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் முதல் விருப்பம் உங்களது சொந்த மாநிலமாகவும், மற்ற இரண்டு விருப்பங்கள் அதன் அண்டை மாநிலங்களாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆதார் கார்டு அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை (Aadhaar-based authentication) இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு எழுதும் நாளில் பயோமெட்ரிக் கருவிகளில் கைரேகை பதிவாவதில் எந்தவொரு சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மாணவர்கள் தங்களது கைகளிலோ அல்லது உள்ளங்கைகளிலோ மருதாணி (Henna), வண்ணம், மை அல்லது பெயிண்ட் போன்ற எதையும் பூசக் கூடாது எனத் தேசிய தேர்வு வாரியம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரெனப் புகுத்தப்பட்டுள்ள இந்த கெடுபிடியான விதிமுறைகள் மற்றும் தேர்வு மைய ஒதுக்கீட்டு மாற்றங்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் வட்டாரத்தில் தற்பொழுது காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.





