செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல குழு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்றுப் பேசினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தென் மாநில தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தின் உரிமை மற்றும் நலன்களை மையப்படுத்தி 3 முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் நேரடியாக முன்வைத்தார்.
2026-ம் ஆண்டு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை சட்ட மசோதா குறித்துப் பேசிய முதல்வர், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி ஒதுக்கீடு முடிவுறும் நிலையில், வெறும் மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டால், தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என்ற அச்சத்தைப் பதிவு செய்தார். கடந்த 50 ஆண்டுகளில் தேசியக் கொள்கையான மக்கள் தொகை கட்டுப்பாட்டைத் தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளன. தேசிய இலக்குகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதற்கு நாடாளுமன்றத்தில் தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரண்டாவது கோரிக்கையாக நீட் தேர்வு விலக்கு குறித்துப் பேசிய அவர், நீட் தேர்வு கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குப் பெரும் பாதகமாக அமைந்துள்ளது என்றும், தமிழகத்தின் சமத்துவக் கல்வி மாதிரியைச் சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நிரப்பத் தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மூன்றாவதாக, இணையவழியில் விற்கப்படும் மருந்துகளுக்குக் கடுமையான சட்ட விதிகளை அமல்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றும் கோரினார். மேலும், காவேரி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் சட்டப்பூர்வத் தீர்ப்புகளையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும், நதிநீர் மேலாண்மையில் கீழ்மடை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.





