விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!

கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், எதிர்கட்சியினரை மிகக் கடுமையாக விமரிசித்து பேசியிருந்தார். சட்டமன்ற கதவுகளை மூடச் சொன்னது, ‘கூட்டு களவாணிகள்’ எனக் குறிப்பிட்டது மற்றும் தவெக அரசின் ‘விஸ்வரூபத்தை’ இனி பார்ப்பீர்கள் என அவர் பேசிய பேச்சுக்கு, திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் இன்று தனது பாணியில் நச் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஒரு முதலமைச்சர் ஸ்தானத்தில் இருப்பவருக்கு பேச்சிலே ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்றும், எதிர்கட்சிகளையும் அரவணைத்து அல்லது அனுசரணையான ஒரு பேச்சு பேசுவதுதான் இதுவரையிலான முதலமைச்சர்கள் பேசிய மரபாக நான் கேட்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பட்டாக்கத்தி கத்தாக்கு சமாச்சாரங்களைப் போல பேசுவது அவருக்கு அழகல்ல என்று சாடினார்.

“வெற்றி பெற்றவர் எல்லாம் வீரர்கள் அல்ல” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வெற்றி நிலையானதா என்பதை நீடித்துத்தான் பார்க்க வேண்டும் என்றார். ஒரு காலத்தில் எங்களை விட்டால் ஆள் இல்லை என்று சொன்ன காங்கிரஸும், எங்களை அசைக்க முடியாது என்று சொன்ன அதிமுகவும் என்னானது என்பது வரலாறு என்றும், அரசியலில் சொந்த பலம் அல்லாமல் ஊரான் பலத்தில் தர்பார் செய்பவருக்கு இவ்வளவு ஆட்டம் தேவையில்லை என்றும் மிக நேரடியாக விஜயைத் தாக்கினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Rangaraj Pandey Open Statement: "4 மணி ஆச்சுனா ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, வறுத்த முந்திரி!" தலைமைச் செயலகத்தில் நடந்த கூத்து... இப்போ எல்லாம் மாறிடுச்சு! ரங்கராஜ் பாண்டே உடைத்த புதிய ரகசியம்!

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் வெளியேறாதவாறு கதவுகளை மூட வேண்டும் என்ற விஜயின் பேச்சுக்கு நையாண்டியாகப் பதிலளித்த துரைமுருகன், சபையிலிருந்து எதிர்கட்சிகள் வெளியேறுவது அவர்களுடைய உரிமை என்றும், எந்த சபாநாயகராலும் கதவை மூடிவிட்டு வெளியேற முடியாது என்று தடுத்துவிட முடியாது என்றும் விளக்கினார். இதன் மூலம் விஜய்க்கு முதலமைச்சருடைய அதிகாரமும் தெரியவில்லை, சபாநாயகரின் அதிகாரமும் தெரியவில்லை என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளதாகக் கூறினார்.

மேலும், விஜயின் ‘விஸ்வரூபம்’ குறித்த எகிறலுக்குப் பதிலடி கொடுத்த அவர், “ஓ… நாங்களையும் பெருந்தலைவர் காமராஜர் விஸ்வரூபத்தைப் பார்த்திருக்கிறோம். எல்லாம் வல்லவனாகக் காட்சி அளித்த எம்ஜிஆருடைய விஸ்வரூபத்தைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் விஸ்வரூபத்தைப் பார்த்திருக்கிறோம். இவருடைய ரூபம் எம்மாத்திரம் என்பதையும் பார்ப்போம்” என்று சவால் விடுத்தார். கூட்டு களவாணிகள் என்ற விஜயின் விமர்சனத்திற்கு, அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் நான் பதில் பேச விரும்பவில்லை என ஒதுக்கித் தள்ளினார்.

அதைத் தொடர்ந்து காவேரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்துப் பேசிய துரைமுருகன், தற்போதைய தவெக அரசுக்கு இந்த சப்ஜெக்ட் குறித்து எந்தப் புரிதலும் இல்லை என்று சாடினார். முதலமைச்சரோ அல்லது அதற்குரிய அமைச்சரோ காவேரி பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும், எந்த அதிகாரியையும் கூப்பிட்டு அதன் பூர்வோத்தரத்தை அவர்கள் அறியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த போலீஸ்.. தம்பியைத் தொட்டா சும்மா இருக்க மாட்டோம்! தவெக அரசை எச்சரித்த திமுக பிரமுகர்!: "மாற்றம்கிறது இதுதானா?" சைதாப்பேட்டை கனி தாக்குதல் முதல் ராயக்கோட்டை கைது முயற்சி வரை கொதித்தெழுந்த கழகம்!

மேகதாது வழக்கில் யார் ஆட்சியில் வாதாடவில்லை என்பதை சட்டமன்றத்தில் தங்கள் தோழர்கள் மிக விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், எங்களைத் திட்டுவதை விட முதலில் அவர்கள் சப்ஜெக்ட்டை புரிந்து கொள்ளட்டும் என்று காட்டமாகத் தெரிவித்தார். கரூர் மாநாட்டு நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குவது குறித்த கேள்விக்கு, அதில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதால் பதில் சொல்ல விரும்பவில்லை என்றவர், கொளத்தூர் விவகாரம் குறித்த தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தான் பதில் அளிக்கத் தயாராக இல்லை என்று கூறிச் சென்றார்.