“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!

தமிழக அரசியல் களத்தில் எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் விவகாரம் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித நிர்வாக அனுபவமும் இன்றி முடிவுகளை எடுக்கும் தவெக அரசை மிகக் கடுமையான உருவகத்தின் மூலம் அவர் சாடியுள்ளார். வேகமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை, அனுபவமற்றவர்களின் கைகளில் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்தப் புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம். அவரை சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். அவர்கள் சரியாகச் சொல்கிறார்களா, தவறாகச் சொல்கிறார்களா என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்து ஆண்டுகள் முடிந்துவிடும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற புரிதல் மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார். ஒரு நாடு அல்லது மாநிலம் செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இருந்து கீழே இறங்குவது மிக எளிதானது என்றும், ஆனால் அதை மீண்டும் உயரத்திற்குக் கொண்டு செல்வது மிகக் கடினமான காரியம் என்றும் எச்சரித்தார். அனுபவமற்ற நிர்வாகத்தால் மாநிலத்தின் வளர்ச்சி பல நூறு கிலோமீட்டர்கள் பின்னோக்கிச் சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்டாலினே எனக்கு போன் பண்ணி எடப்பாடிய முதலமைச்சர் ஆக்க கேட்டார்!" - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

சமீபகாலமாக தமிழகத்தில் கஞ்சா போதை கலாச்சாரமும், அதைச் சார்ந்த வன்முறைக் கும்பல்களின் அராஜகமும் அதிகரித்து வரும் சூழலில், ஆட்சியில் இருப்பவர்களுக்குப் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் கஞ்சா போதையில் பட்டாக்கத்திகளுடன் வலம் வரும் வாலிபர்களின் அராஜகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு, இது போன்ற ஆடம்பர அறிவிப்புகளில் மட்டும் கவனம் செலுத்துவது மக்களின் நிம்மதியைக் கெடுக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை விளக்கிய துரைமுருகன், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மாநிலத்திற்குப் பின்னடைவையே ஏற்படுத்தும் என்றார். பேருந்தை இயக்கும் டிரைவருக்குச் சரியான பயிற்சி இல்லாவிட்டால் பயணம் ஆபத்தில் முடியும் என்பதைப் போல, நிர்வாக அனுபவமில்லாத அரசு எடுக்கும் முடிவுகள் மாநிலத்தின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் சவாலாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.