“குதிரை பேரத்துல விஜய் தான் முதல் குற்றவாளி!” – அ.தி.மு.க உடைப்பு, போலி கடித விவகாரத்தை அப்பட்டமாக உடைத்த டி.டி.வி.தினகரன்!

தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் மீது அமுமக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். 108 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு தங்களைத் தூய சக்தி என்று கூறிக்கொள்ளும் தவெக அரசின் ஆரம்பமே கோணலாகத் தான் தொடங்கியுள்ளது என்று அவர் சாடினார். ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய்யை ஆதரிக்கிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது தார்மீக அடிப்படையில் முற்றிலும் தவறானது என்றும், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயித்துவிட்டு இப்போது அதிகாரத்திற்காகப் பின்வாங்குவது ஒரு பொருந்தாத விசித்திரக் கூட்டணி ஆட்சி என்பதை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி எப்போது வேண்டுமானாலும் போய்விடும் என்ற பயத்தின் காரணமாகவே அண்ணா தி.மு.க-வை உடைத்து, அவர்களுக்குத் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து இழுக்கும் வேலைகள் நடந்தன என்று தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 30 எம்.எல்.ஏ-க்கள் திரட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்று அதிருப்தியாளர்கள் கூறுவது தங்களது சுயநல துரோகத்தை மறைப்பதற்காக ஆடும் நாடகம் என்றார். ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வந்தவர்கள், இன்று அ.தி.மு.க-வைத் தீய சக்தி என்றும் ஊழல் சக்தி என்றும் விமர்சித்தவர்களிடமே போய் தஞ்சமடைவது அப்பட்டமான சுயநலம் என்று சாடினார். தவறான பாதையில் செல்லும் அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும், அவர்களுக்காக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் உடன் நேரடியாகப் பேசத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "5 பைசா செலவு பண்ணாம ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு!" - திருச்சி மேடையில் தவெக-வை பார்த்து வியந்த துரை வைகோ எம்.பி.!

தொடர்ந்து பேசிய தினகரன், தமிழகத்தில் நடப்பது ஒரு தெளிவான “கிளியர் கட் குதிரை பேரம்” (Clear Cut Case of Horse Trading) என்று சாடினார். தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வைக்கோவின் கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் சொல்லிவிட்டு, அவர்களுக்குத் தானே நேரில் வந்து பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைப்பதாக விஜய் வாக்குறுதி அளித்தது அப்பட்டமான குதிரை பேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் முடிந்த கையோடு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தனி ஒரு எம்.எல்.ஏ-வான எஸ்.காமராஜின் ஆதரவுக் கடிதத்தைக் கட்சியின் அனுமதியின்றி, திருட்டுத்தனமாகப் பெற்று ஆளுநரிடம் தவெகவினர் கொடுத்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளதை நினைவூட்டினார். அந்த எம்.எல்.ஏ தற்போது வழக்கை வாபஸ் பெற்றிருந்தாலும், உரிய நேரத்தில் இந்த விவகாரத்தை சட்டப்படி கையில் எடுப்போம் என்றும், அப்போது பதிவாகும் எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்கில் முதல் குற்றவாளியான ஏ1 (A1) இடத்தில் திருவாளர் விஜய் தான் கண்டிப்பாக இருப்பார் என்றும் அதிரடி எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தலுக்கு முன்பு “மக்களின் வரிப்பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டேன்” என்று சினிமா பாணியில் கத்திப் பேசி, ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்றிவிட்டு, தற்போது பழைய ஆட்சியாளர்களை மிஞ்சும் அளவிற்குத் தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான “ஒயிட் பவுடர் மந்திரி” மாத்திரையை நசுக்கிய விவகாரத்தைக் கிண்டல் செய்த தினகரன், கிரெடிட் கார்டையும் 500 ரூபாய் நோட்டையும் வைத்துப் பிராக்டிகலாக சோதனை செய்ய வேண்டிய இந்த விவகாரத்தில் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்ற பழமொழிக்கேற்ப இவர்களின் ஆட்டம் சில காலம் ஓடத்தான் செய்யும் என்றும், அனைத்தும் தானாக அடங்கும் வரை தாங்கள் பொறுமையோடு காத்திருக்கப் போவதாகவும் டி.டி.வி.தினகரன் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.