தமிழக அரசியல் அரங்கில் திமுக மற்றும் தவெக இடையிலான வார்த்தைப் போர் மிக மோசமான, அருவருப்பான எல்லைகளைத் தொட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை “மகா அயோக்கியன்” என்றும், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் பிறப்பையே சந்தேகப்பட்டும் மிகத் தரக்குறைவாகப் பேசியிருந்தார். இந்த அநாகரிகமானப் பேச்சு தமிழக அரசியலில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திமுக தலைமைக்கு மிகக் காரசாரமான, ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும் பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“நீங்கள் திருந்துவதற்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை” என்ற அதிரடி வரிகளுடன் தன் கண்டனத்தைத் தொடங்கியுள்ள அமைச்சர் நிர்மல் குமார், திமுகவின் இந்த அநாகரிகப் போக்கை மிகக் கடுமையாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். “மேடை போட்டு என்னைப் பற்றியும், எங்கள் தலைவரைப் பற்றியும் மிக அசிங்கமாகப் பேச வைப்பதுதான் உங்கள் கையில் இருக்கும் கடைசி ஆயுதமா ஸ்டாலின் அவர்களே?” என திமுக தலைவருக்கு நேரடியாகவே சவால் விட்டுள்ளார். பெண்களும் குழந்தைகளும் தங்களின் முகமாகக் கருதி ஆராதிக்கும் தவெக எனும் மக்கள் இயக்கத்தை நேருக்கு நேர் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணி இல்லாததால் தான், திமுகவினர் தெருவில் இறங்கி இதுபோன்ற அருவருப்பான அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சாடியுள்ளார்.
மேலும், “ஆர்ப்பாட்ட மேடைகளில் பேசும் உங்கள் தரமற்ற மனிதர்களின் அசிங்கமான பேச்சுகளை உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உங்களால் போட்டுக் காட்ட முடியுமா?” என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுகவினரை நிலைகுலைய வைத்துள்ளார். தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்குள் நுழைந்தாலும், அது ‘தீயசக்தி’ திமுகவால் மட்டுமே சாத்தியம் என்ற உண்மை மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றும், இந்த அநாகரிக அரசியலுக்குத் தமிழக மக்கள் மிக விரைவில் தங்களின் வாக்குகள் மூலம் இறுதி முடிவுரை எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம் என்றும் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.





