“காயமடைந்த CJP மாணவர்களைச் சந்திக்க அனுமதி மறுப்பு! திமுக மூத்த எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டதால் திமுகவுக்குப் பெரும் அதிர்ச்சி!”

தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய ‘சலோ சன்சாத்’ பேரணியில் காவல்துறை நடத்திய தடியடியால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பல மாணவர்களும் போராட்டக்காரர்களும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்குப் பின் தளர்வடையாத மாணவர்கள், தற்போது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு மீண்டும் திரும்பித் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் பரபரப்பான சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் காயமடைந்து போராடி வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தங்களது ஆதரவைத் தெரிவிக்கவும், முயன்ற திமுக நாடாளுமன்றக் குழுவிற்குத் டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுகவின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தலைமை தாங்கிச் சென்ற திமுக குழுவினரைப் போராட்டக் களத்திற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் பாதியிலேயே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளனர். எவ்விதப் போதிய காரணங்களையும் தெரிவிக்காமல் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் பாராமல் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரைப் பலவந்தமாகத் திருப்பி அனுப்பிய சம்பவம் திமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Yogi Fierce Attack: மதியம் 12 மணிக்கு தூங்கி எழுந்து களியாட்டம் போட்ட முதல்வர் - யோகி விளாசல்!

ஏற்கனவே, நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். பிற கட்சித் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்பிக்களான ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் காரசாரமான அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அழுத்தமே இந்தத் தடைக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வரும் நாட்களில் நாடாளுமன்றத்திலும் இச்சம்பவம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.