“அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு!” – விராலிமலை விஜயபாஸ்கரை தொடர்ந்து.. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ பதவியை அதிரடி ராஜினாமா செய்தார்!

தமிழக அரசியல் களம் தினந்தோறும் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்புதான் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அதிமுகவிற்கு மேலும் ஒரு பேரிடியாக மற்றொரு மூத்த தலைவரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் கட்சியின் தற்போதைய தேர்தல் வியூகங்கள் மீது கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அவரிடம் வழங்கினார்.

அதிமுகவில் இருந்து ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவையும் சேர்த்து அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் மேலும் சரிந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அங்க போய் சண்டை போட்டவங்களும் இருக்காங்க!" எம்எல்ஏ-க்கள் பயிற்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேச்சு... திமுக ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு!

அடுத்த இலக்கு தவெக-வா?

அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் நம்பத்தகுந்த தகவல்களின்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகி, விரைவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் திட்டமிட்டுள்ளார். அதற்கு வசதியாகவே அவர் தனது எம்.எல்.ஏ பதவியை தற்போது துறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த அதிரடி முடிவை அடுத்து கரூர் தொகுதியும் அதிகாரப்பூர்வமாகக் காலியானதாக அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கனவே காலியாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து கரூர் தொகுதியும் விரைவில் இடைத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து வருவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குப் பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.