“மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு!” – இபிஎஸ்சை கிழித்துத் தொங்கவிட்டு அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்! தவெக-வில் இணைகிறாரா?

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்பொழுது மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஒட்டுமொத்தமாக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ பதவி விலகல் கடிதத்தைக் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், அதில் தலைமைக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், வைகைச்செல்வனின் இந்த அதிரடி முடிவு இபிஎஸ்-க்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

வைகைச்செல்வன் எழுதியுள்ள அந்த ராஜினாமா கடிதம், சாதாரணமான ஒரு விலகல் அறிக்கை அல்ல; அது எடப்பாடி பழனிசாமியின் ஒட்டுமொத்த தலைமைப் பண்பையும் கேள்விக்குறியாக்கும் ஒரு அரசியல் பிரளயம். அக்கடிதத்தில், “ஒரு தலைவன் என்பவன் தான் அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பான். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை” என்று எடப்பாடி பழனிசாமியை மிக நேரடியாகவும் ஆக்ரோஷமாகவும் சாடியுள்ளார். மேலும், “திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டதன் மூலம், தீவிரமான திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக தற்பொழுது சமரச போக்கிற்குச் சென்றுவிட்டது; இதனால் கழகம் தனது வரலாற்று அடையாளத்தையே முழுமையாக இழந்துவிட்டது” என்ற மிகப்பெரிய வெடிகுண்டையும் வைகைச்செல்வன் தூக்கிப் போட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "Tie Them Up If Someone Demands Money Using Our Names!" தவெக பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு! "போட்டோ எடுத்துட்டு ஏமாத்துறாங்க!" போலி ஆசாமிகளுக்கு அமைச்சர் ஆனந்த் பகிரங்க எச்சரிக்கை! மாற்றுக்கட்சியினர் இணையும் பின்னணி!

தலைமையால் தான் மிகக் கொடூரமாகப் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தையும் அவர் வெளிப்படையாக உடைத்துள்ளார். கடந்த தேர்தல் களத்தில் தான் முற்றிலுமாகத் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, இரத்தம் சிந்தி கழகத்திற்காகத் தீவிரப் பிரசாரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், “மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் தற்பொழுது ஆழமாக உணர்ந்து கொண்டேன்” என்று தனது மனக் குமுறலைக் கொட்டியுள்ளார்.

‘மதியாதார் பின்சென்று வாழ்வதை விடக் கெடுவது நன்று’ என்கிற வள்ளுவனின் வரிகளைச் சுட்டிக்காட்டி, மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக வளர்த்த இந்த இயக்கத்தை விட்டு இபிஎஸ்-ஸின் தவறான முடிவுகளால் வெளியேறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனைச் சந்தித்துப் பேசியிருந்த வைகைச்செல்வன், தற்பொழுது எடப்பாடியை மிகக் கொடூரமாக விமர்சித்துக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறியிருப்பது, அதிமுக கூடாரத்தில் இருக்கும் உள்கட்சி பூசல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.