“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!

தமிழ்நாடு அரசியலில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள ‘குதிரை பேரம்’ மற்றும் எம்.எல்.ஏ-க்கள் party தாவல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆளும் தவெக (தமிழக வெற்றி கழகம்) தரப்பு குதிரை பேரம் பேசி இழுப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, இந்த விவகாரம் குறித்து தனது அதிரடியான மற்றும் தெளிவான நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிமுக மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளித்த விசிக தலைவர், தமிழ்நாட்டு அரசியலில் குதிரை பேரம் மிக மோசமாக, வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது என்று பேசப்படும் இந்தக் குற்றச்சாட்டு என்பது நூறு சதவீதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும், இதில் மாநில ஆளுநருக்கு சட்டப்பூர்வமாகத் தலையிட அதிகாரம் இருந்தால், அவர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்!" – மருத்துவ இடங்கள் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட திருமாவளவன், அக்கட்சியின் தற்போதைய மௌனத்தின் பின்னணி என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுகவை முழுவதுமாக தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது என்றால், ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டிய அதிமுக தலைவர்கள் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்டார். தங்களின் கட்சியைச் சீர்குலைக்க முயலும் போது, அதற்கு எதிராக மக்கள் மத்தியில் அரசியல் போராட்டங்களை முன்னெடுக்காமல், ஆளுநரிடம் மனு கொடுப்பதோடு மட்டும் அதிமுக கடமையை முடித்துக் கொள்வது ஏன் என்றும், எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டதால் சற்று கோபமடைந்த திருமாவளவன், ஊடகங்கள் சம்பந்தப்பட்ட தரப்பிடம் மட்டுமே கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதிமுக பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எங்களைப் போன்றவர்களிடத்தில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டதாகக் கூறினால் தவெக தலைமையிடம் கேளுங்கள், திமுக மீது குற்றச்சாட்டு இருந்தால் திமுகவிடம் கேளுங்கள், பாதிக்கப்பட்ட அதிமுகவிடம் பதில் கேளுங்கள் என்றார். இதில் எந்தச் சம்பந்தமும் இல்லாத எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி எழுப்புவது அரசியல் அறமும் அல்ல, பொருத்தமான அணுகுமுறையும் அல்ல என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.