[ட்ரோல்களுக்கு மகேந்திரன் பதில்]: “சோலார் சிஸ்டம்னு சொன்னது என் தப்புதான்; மக்கள் மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சிடுங்க!” உடைந்து போய் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் மகேந்திரன். சமீபத்தில் இவர் அளித்த அரசியல் மற்றும் சமூகச் சார்ந்த நேர்காணல் ஒன்று, சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், தன்னை பற்றி பரவி வரும் இந்த அவதூறுகளுக்கும் ட்ரோல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் மகேந்திரன் தற்பொழுது மிகவும் உருக்கமான ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், “சமீபத்தில் நான் கொடுத்த நேர்காணலில் பேசிய பல விஷயங்கள் பயங்கரமாய் ட்ரோல் செய்யப்பட்டு வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என்னை மதிக்கும் என் நண்பர்களே கூட ‘மகேந்திரன் இதைச் சொல்ல வரவில்லை’ என்று ஒரு வார்த்தை கூறி எனக்கு ஆதரவாக நின்றிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பரவாயில்லை, நான் பேசியதற்கு நானே ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்து விடுகிறேன்” என்று தனது உரையைத் தொடங்கினார்.

மின்சாரப் பற்றாக்குறை மற்றும் மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்பவர்களைப் பார்த்துதான் “நீங்க கேள்வி கேட்டா கரண்ட் வந்துருமா?” என்று தான் கேட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், “மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு ஆறு மாத கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டிருந்தார். அவர் மீதுள்ள நம்பிக்கையில்தான் நானும் ஆறு மாதம் டைம் கொடுங்கள், கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காதீர்கள் என்று சில அரசியல்வாதிகளை நோக்கிக் கூறினேன்” என்றார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சட்டமன்றத்தில் புதிய வரலாறு!: "மாற்றம் ஒன்றுதான் மாறாதது!" தமிழக ஆளுநர் உரையில் முதலமைச்சர் விஜய்க்கு இமயமலை அளவு பாராட்டு!

தொடர்ந்து பேசிய அவர், நேர்காணலின் போது ‘சோலார் சிஸ்டம்’ என்று தான் குறிப்பிட்டது வார்த்தைப் பிழைதான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “நான் ஒன்றும் பயங்கரமான புத்திசாலி மாணவன் கிடையாது, 12-ஆம் வகுப்பைக் கூட பாதியில் நிறுத்திய ஒரு ஆவரேஜ் ஸ்டூடென்ட் தான். நான் அங்கு சோலார் எனர்ஜி அல்லது சோலார் பேனல் என்று சரியாகச் சொல்லத் தெரியாமல் மாற்றிச் சொல்லிவிட்டேன். 2015-ஆம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் முற்றிலும் சோலார் ஆற்றலால் இயங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல 2011-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களை அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் தொழில்நுட்பங்களை நாம் 2026-லும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மிஸ் பண்ணிவிட்டோமே என்ற ஆதங்கத்தில்தான், என் வீட்டில் இருந்தாவது கரண்ட் எடுத்துக் கொள்ளுங்கள், நானும் மக்களோடு மக்களாகக் கஷ்டப்படுகிறேன் என்ற அர்த்தத்தில் பேசினேன்” என்று விளக்கமளித்தார்.

மேலும், தனக்குத் திமிறு மற்றும் ஆட்டிடியூட் அதிகம் என்று பரப்பப்படும் வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார். “நான் சின்ன வயதிலேயே பெரிய இயக்குநரிடம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சீன் கேட்டதாக ஒரு அண்ணன் விளையாட்டாகப் பேசிய பழைய விஷயத்தை இப்பொழுது கிளறுகிறார்கள். அவரிடம் நான் போனில் கேட்ட போது, சும்மா ஃபன்னுக்காக அப்படிப் பேசியதாகக் கூறினார். அதேபோல, மக்களின் கஷ்டத்தைப் பார்த்து நான் ஏளனமாகச் சிரிப்பதாகக் கூறுகிறார்கள். தயவுசெய்து எனக்கு அப்படிப்பட்ட பட்டங்களைக் கொடுத்துவிடாதீர்கள். இன்று நான் ஒருவேளை சோறு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இந்த மக்கள்தான் காரணம். என் நடிப்பு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக விமர்சியுங்கள், நான் திருத்திக்கொள்கிறேன். ஆனால், என் குணாதிசயத்தைத் தவறாகச் சித்தரித்து என் மீது பழி சுமத்தாதீர்கள். என் பேச்சால் பொதுமக்கள் மனது ஹர்ட் ஆகியிருந்தால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு, சாரி கேட்டுக்கொள்கிறேன்” என்று கண்கலங்கியபடி மகேந்திரன் பேசியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறி அவர் தனது வீடியோவை நிறைவு செய்துள்ளார்.