Netizens Slam AI Video: வெடித்தது புதிய சர்ச்சை! ‘தமிழ்நாடு அரசு’ பெயரிலேயே பிழையா? முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தனது முதல் 3 கோப்புகளில் ஒன்றாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், இந்த விழாவில் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்பட்ட ஏஐ (AI) விளக்க வீடியோவில் இடம்பெற்றிருந்த பல அடுக்கடுக்கான தமிழ் எழுத்துப் பிழைகள் தற்பொழுது ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாகப் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக அலட்சியத்தைக் கடுமையாகச் சாடி எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்துப் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ (AI) காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன” என்று மிகவும் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த விளக்க வீடியோவில் ‘தமிழ்நாடு அரசு’ என்ற பெயரிலேயே பிழைகள் இருந்ததாகவும், ‘ஆலந்தூர் மெட்ரோ ரயில்’ நிலையத்தின் பெயர் கூட மிகவும் தவறான தமிழ் எழுத்துக்களுடன் திரையிடப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் ஸ்கிரீன்ஷாட்டுகளுடன் தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அதெல்லாம் வெறும் வதந்தி!" அமைச்சரவை மாற்றம் குறித்து பரவும் செய்திகளுக்கு தவெக அதிரடியாக முற்றுப்புள்ளி!

இந்த தொழில்நுட்பக் கோளாறு மற்றும் வார்த்தைச் சிதைவு குறித்து மேலும் கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், “இந்த காணொளி பொதுவெளியில், அதுவும் மாநிலத்தின் முதலமைச்சர் பங்கேற்கும் ஒரு உயர்மட்ட அரசு விழாவில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்னால் அதிகாரிகள் யாரும் இதனைப் பரிசீலிக்கவில்லையா? (Verification) அல்லது பிழைகள் இருப்பது தெரிந்தே அலட்சியமாக வெளியிடப்பட்டதா?” என்று தனது பதிவின் மூலம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பிற்காகப் போர்க்கால அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஒரு மிக முக்கிய திட்டத்தின் தொடக்க விழாவில், தமிழ் மொழியின் வார்த்தைகளைச் சரியாகக் கையாளாமல் அரசுத் துறை அதிகாரிகள் காட்டியுள்ள இந்த அசுரத்தனமான அலட்சியப்போக்கு, தற்போது தவெக அரசுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.