குரு தட்சிணை: “படிப்பு நிறுத்தப் பார்த்தப்போ அப்பாவா நின்னார்!” 20 வருஷம் கழித்து ரிட்டயர்டு ஆசிரியருக்குப் புதிய கார் பரிசளித்த ஏழை மாணவர்! மேடையிலேயே கதறி அழுத குருநாதன்! நெகிழவைக்கும் உண்மைச் சம்பவம்!

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற முதுமொழிக்கு இலக்கணமாக, தமக்கு வாழ்வளித்த ஆசிரியரின் ஓய்வு நாளில், அவருக்குப் புதிய கார் ஒன்றை பரிசளித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் நெகிழ வைத்துள்ளார் ஒரு முன்னாள் மாணவர். கல்வி என்பது வெறும் வியாபாரமாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், குருவிற்கும் சீடனுக்கும் இடையே இருக்கும் உன்னதமான பாசப் பிணைப்பை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாவேரி (Haveri) மாவட்டத்தில் உள்ள ஹனகல் நகரின் புகழ்பெற்ற குமாரேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சி.எஸ். வஸ்திராத் (CS Vastrad). இவர் தனது நீண்ட கால ஆசிரியப் பணியை முடித்துத் தற்பொழுது பணி நிறைவு பெற்றுள்ளார்.

இப்பள்ளியில் கடந்த 2007 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு (SSLC) படித்தவர் நவீன் புலிஹல்லி (Naveen Hulihalli). சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட நவீனின் குடும்பம், கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது. அன்றாட உணவிற்கே கஷ்டப்பட்ட சூழலில், பத்தாம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்திவிட்டு ஏதேனும் கூலி வேலைக்குச் செல்ல நவீன் முடிவெடுத்தார்.

இதை அறிந்த ஆசிரியர் வஸ்திராத், அந்த மாணவனைத் தடுத்து நிறுத்தினார். “உனக்கு நான் இருக்கிறேன்” என்று கூறி, நவீனின் பள்ளிப் படிப்பு முதல் அவர் முதுகலை (Post Graduation) பட்டப்படிப்பை முடிக்கும் வரை அனைத்துக் கல்விச் செலவுகளையும், ஒரு தந்தையின் ஸ்தானத்தில் நின்று தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கிப் படிக்க வைத்தார். ஆசிரியரின் இந்த அசாத்திய ஆதரவால் சிறப்பாகப் படித்து முடித்த நவீன், தற்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு முன்னணி பன்னாட்டு ஐடி (MNC) நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Shockwaves in Global Energy Market! Iran Shuts Strait of Hormuz! "கப்பல்கள் சிறைபிடிப்பு? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!" இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க பதிலடி! இந்தியாவிற்கு பாதிப்பா?

இந்நிலையில், ஆசிரியர் வஸ்திராத்தின் பணிநிறைவு பாராட்டு விழாவை பள்ளி நிர்வாகமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தன. ஹனகல் குமாரேஸ்வரா மடத்தின் ஸ்ரீ குருசித்த ராஜயோகிந்திர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென மேடையின் அருகே புத்தம் புதிய சொகுசு கார் ஒன்று கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அந்த காரின் சாவியை ஆசிரியர் வஸ்திராத்தின் கைகளில் வழங்கி நவீன் காலில் விழுந்து ஆசி பெற்றார். எதிர்பாராத இந்தப் பரிசைக் கண்டதும், ஆசிரியர் வஸ்திராத் மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இந்த உணர்வுப்பூர்வமான காட்சி அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்களையும் குளமாக்கியது.

காரைப் பரிசாகப் பெற்ற பின் ஆசிரியர் வஸ்திராத் பேசுகையில், “ஒரு ஆசிரியராக என் கடமையை மட்டுமே நான் செய்தேன். இன்று என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான என் பிள்ளைகள் நல்ல நிலையில் ஒன்று கூடி நிற்பதும், சுவாமிகளின் ஆசி கிடைப்பதுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது. நவீனின் இந்த அன்பும் மரியாதையும் என்னை வார்த்தைகளின்றி நெகிழச் செய்துவிட்டது” என்றார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Matchbox Silk Saree: தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச்சேலை! இந்திரகீலாத்ரி துர்க்கையம்மனுக்கு நெசவாளர் கொடுத்த பரிசின் முழு விபரம்!

தொடர்ந்து பேசிய மாணவர் நவீன், “அவர் எனக்கு வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் சொல்லித் தரவில்லை; வாழ்க்கையின் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்தார். நான் இன்று இந்த நல்ல நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். என் வாழ்க்கையை மாற்றிய அந்த மகானுக்கு நான் செய்யும் மிகச்சிறிய நன்றிக் கடன் தான் இந்த கார்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் இவர்களது புகைப்படங்கள், ஆசிரியர் தொழிலின் உன்னதத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.