மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நாடு முழுவதும் உள்ள தனது இணைவு பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கையை (Three-Language Policy) பின்பற்றி மூன்று மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக்கொள்கையின் (NEP 2020) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கண்டிப்பாகப் பூர்வகுடி இந்திய மொழிகளாக (Indian Languages) இருக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையினால் மாணவர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் வாரியம் ஒரு முக்கிய சலுகையையும் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த மூன்றாவது மொழிப் பாடத்திற்குப் பொதுத்தேர்வு (Board Exam) எதுவும் நடத்தப்படாது.
பள்ளிகளில் மாணவர்கள் காட்டும் திறமை மற்றும் உள்மதிப்பீட்டு (Internal Assessment) மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் தேவையற்ற மன அழுத்தமின்றி தங்களுக்குப் பிடித்தமான மொழிகளைத் தேர்வு செய்து படிக்க முடியும்.
புதிய கல்விக்கொள்கையின்படி கொரியன், ஜப்பனீஸ், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளையும் மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் ஒரு கூடுதல் மொழியாகத் தேர்வு செய்து படிக்கலாம். ஆனால், ஆங்கிலம் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மைப் பயிற்று மொழியாக இருப்பதால், அது வெளிநாட்டு மொழியாகக் கருதப்படாது. எனவே, வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்யும் மாணவர்களும் இரண்டு இந்திய மொழிகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
முன்னதாக, தமிழகத்தில் முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த மும்மொழி கொள்கையைக் கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நாடு முழுவதும் இக்கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ வாரியத்தின் இந்த அதிரடி உத்தரவு கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.





