சிபிஎஸ்இ பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிவுகளைப் பெற்ற மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், விடைத்தாள் நகல் பெறுதல், மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணங்களை மத்திய பள்ளி கல்வி அமைச்சகம் அதிரடியாகக் குறைத்து அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மாணவர்கள் தங்களது விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெற்றுப் பார்ப்பதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.700 கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய கட்டண அமைப்பின்படி, மாணவர்கள் வெறும் ரூ.100 மட்டும் செலுத்தினால் தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்க மாணவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதுமட்டுமின்றி, மதிப்பெண் கூட்டலில் ஏதேனும் தவறு உள்ளதா என சரிபார்க்கும் ‘வெரிஃபிகேஷன்’ கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான விடையை மறுமதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ஒரு கேள்விக்கு ரூ.100 லிருந்து வெறும் ரூ.25 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், “மாணவர்களின் மன நலனும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம். ஒருவேளை மாணவர்கள் இந்த மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, அதன் பிறகு அவர்களின் மதிப்பெண்கள் அதிகரித்தால் அல்லது ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால், அவர்கள் மறுமதிப்பீட்டிற்காகச் செலுத்திய ஒட்டுமொத்த தொகையும் முழுமையாக மாணவர்களுக்கே திருப்பித் தரப்படும் (Full Refund)” என்று உறுதி அளித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்டோ மே 19 முதல் மே 22 வரையிலும், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான விண்டோ மே 26 முதல் மே 29 வரையிலும் திறந்திருக்கும் என வாரியம் தெரிவித்துள்ளது.





